அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால் ! மேயர் பிரியா என்னுடன் விவாதிக்க துணிச்சல் இருக்கிறதா !!?
சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சென்னை மேயர் பிரியா மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும் காட்சி அரசியலில்
“என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” – அமைச்சர் கீர்த்தனா சவால்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளையும், சென்னை மேயர் பிரியாவையும் கடுமையாக விமர்சித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “தமிழ்நாடு அரசின் வளர்ச்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினர் இன்னும் கதறிக் கொண்டு இருக்கின்றனர். சென்னை மேயர் என்பது மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்த பதவி.
ஆனால் அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைப் பேணாமல் காரில் தொங்கிக் கொண்டும், மற்றவர்களுக்கு குடை பிடித்தும் மேயர் பதவிக்குப் பெருமை சேர்த்துள்ளார்” என்று விமர்சித்தார்.
மேலும், “ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக கேலி, கிண்டல் அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். கொள்கை ரீதியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடன் அருகில் அமர்ந்து விவாதிக்க சென்னை மேயர் பிரியாவுக்கு துணிச்சல் இருக்கிறதா?” என சவால் விடுத்தார்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், “70 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றம் குறித்து வெறும் பேச்சுகள் மட்டுமே பேசப்பட்டன.
ஆனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
உள்ளாட்சித் துறையில் பெண்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், “முந்தைய ஆட்சிகளில் பெண்கள் பெயரளவிலேயே பதவியில் இருந்தனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களே அதிகாரத்தை பயன்படுத்தினர். அந்த நிலையை மாற்றி பெண்களுக்கு உரிய அதிகாரத்தையும் மரியாதையையும் தற்போதைய அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
திமுகவை விமர்சித்த அவர், “பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் திமுக, தங்களது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கே முழுமையான அதிகாரம் வழங்கவில்லை.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு உண்மையான மரியாதையும் அதிகாரமும் எங்கு கிடைக்கிறது என்பதை உணர்ந்து திமுகவில் உள்ள பெண்கள் எங்களுடன் இணைய வேண்டும்” என்றார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, “இந்த அரசு பொறுப்பேற்ற 30 நாட்களுக்குள் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை போதைப் பொருட்களுக்கு எதிராக 473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றார்.
மேலும், “30 நாட்களில் 1,418 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
புதிதாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை காணாமல் போன பெண் மற்றும் குழந்தையை மிகக் குறுகிய காலத்தில் மீட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 15 முதல் 20 நாட்களில் மட்டும் 1,328 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், 2,545 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 319 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இருசக்கர வாகனங்கள் மற்றும் நவீன கண்காணிப்பு ட்ரோன்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீர்த்தனா கூறினார்.