லஞ்ச ஒழிப்பு துறைக்கு எ.வ. வேலு கோரிக்கை கடிதம் – என்ன கோரிக்கை தெரியுமா !!?
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ. வேலு பதவி வகித்து வந்தார். அப்போது அவர், ஊழலில் ஈடுபட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 25ஆம் தேதி (25.06.2026) அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதாவது தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக எ.வ. வேலு மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதிகாரிகளின் இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் சோதனை நடத்தியிருந்தனர்.இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 இலட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் 2022ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி கொடுத்தும் ஆனால் எந்தவொரு பணியும் செய்யாமல் மேலும் ரூ.3.23 கோடியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தனர். இத்தகைய சூழலில் தான் சாலை அமைக்காமல் நிதி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் (03.07.2026) தேதியில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு எ.வ.வேலுவுக்கு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் எ.வ. வேலு இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு இருதய கோளாறு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டட்தால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அவர் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராக முடியாது என்றும், அதற்குப் பதிலாக திங்கட்கிழமை அல்லது மற்றொரு தேதியில் ஆஜராக கூடுதல் கால அவகாசம் வழங்கி புதிய தேதியை அறிவிக்குமாறும் அவரது வழக்கறிஞர்கள் மற்றும் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.