சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜான் பாண்டியன் வலியுறுத்தல்!
ஆலங்குளம் அருகே காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனைதமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள மருதம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், “கள்” இறக்கியதாகக் கூறி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மணிகண்டன் காயமடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை இன்று நேரில் சந்தித்த ஜான் பாண்டியன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜான் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மருதம்பத்தூர் பகுதியில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது நடைபெற்ற இந்தத் துயரமான சம்பவம் மிகுந்த கவலைக்குரியது. இச்சம்பவம் குறித்துத் தமிழக அரசு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.”
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், உயிருக்கு ஆதாரமான பனைத் தொழிலைச் செய்பவர்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் அல்லது பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் த.ம.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.