காவல்துறையினரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய போதை கும்பல்! துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறையினர்!
கடலூரில் போதையில் ஈடுபட்ட மூவர் கொண்ட ரவுடி கும்பல் காவலாளி ஒருவரை அடித்து தாக்கி இன்ஸ்டாவில் வீடியோவாக எடுத்து வெளியிட்டதோடு, அடுத்தடுத்து பல இடங்களில் தகராறு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை அமைத்து போதை கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் அந்த கும்பல் காவல்துறையினரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் போதை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மூன்று பேர் கொண்ட கும்பல் கடைகள், தனியாக இருப்பவர்களை தாக்கி ரவுடித்தனம் செய்து வருவதாக புகார்கள் வந்தன.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகரைச் சேர்ந்த (45 வயது) நபர் கார்த்திக். இவர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்தபோது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் கார்த்திக்கை தாக்கி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக பதிவு செய்து வெளியிட்டனர்.
கார்த்திக் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தபோதும் அந்த கும்பல் விடாமல் தாக்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயமடைந்த கார்த்திக் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற கும்பல், அந்த வழியாக சென்ற ஆம்புலன்சை பின்தொடர்ந்தனர். அப்போது மருத்துவமனைக்குள் செல்ல விடாமல் தடுத்து காவலாளிகளிடமும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று அருகில் உள்ள பெட்டிக்கடை வைத்திருந்த நபரிடம் தகராறு செய்து, அந்த கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
மேலும், கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி என்பவரையும் தாக்கியதுடன், அதனை தடுக்க வந்த மற்றொரு வியாபாரி ராஜேந்திரனையும் தாக்கி, அவரது கடையை சூறையாடினர். இதோடு மட்டும் இல்லாமல், கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய அந்த கும்பலினர், பேருந்து ஓட்டுநரை தாக்கினர். சின்னசேலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கணேசனை தாக்கி, அவரது தலையில் பீர் பாட்டிலை உடைத்து படுகாயமடையச் செய்தனர்.
தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த மூன்று பேர் கொண்ட கும்பலை கண்டுபிடித்தனர். இதில் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த கந்தவேல் (வயது 21), சிவா என்கிற விக்னேஷ் (வயது 21), பாலாஜி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனிப்படை அமைத்து போதை கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேர் கும்பலும் பெரியகண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், காவலர்கள் வீரமணி மற்றும் வேல்முருகன் ஆகியோரை கையில் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓட முயன்றனர். இதனால் தற்காப்புக்காக உதவி காவல் ஆய்வாளர் சந்துரு, துப்பாக்கியால் கந்தவேலின் காலில் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
மேலும் ஒருவர் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது காயமடைந்து காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து காயமடைந்தவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை கும்பல் செய்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தப்பிச்சென்ற இன்னொரு ரவுடியையும் தேடி வருகின்றனர். பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.