சிறந்த காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கான விருதை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழகத்தில் சிறந்த மூன்று காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?குடியரசு தின விழாவையொட்டி கோட்டை அமீர் விருது,முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடத்தப்பட்டது. காலை 07:52 மணிக்கு விழாப் பகுதிக்கு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காரின் முன்னும் பின்னும் காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து காலை 07:54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ அழைத்து வரப்பட்டார்.

அதைத் தொடர்ந்து காலை 08:00 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார் அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. அடுத்தாக ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணி வகுத்துச் சென்றது.

காவல்துறையினருக்கு விருதுகள்
விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆற்றில் சிக்கிய போது , தங்களுடைய இடுப்பில் கயிறுகளை கட்டிக்கொண்டு அவர்களை மீட்டதற்காக அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் சங்கர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுரேஷ், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ரமேஷ் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன் , விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன், சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்படது.

கோட்டை அமீர் விருது.
இதனை தொடர்ந்து கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் இந்த விருதை வழங்குகிறது. இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லாவிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்படுகிறது. காங்கேயம் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலிமுல்லா தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ளார்.மேலும் கோவில் கட்டுவதற்காக மூன்று லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இந்த விருது பெறுபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையம் எது.?
அடுத்தாக சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. குற்றங்களை குறைத்தல் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் முதல் பரிசு மதுரை மாநகரத்தைச் சேர்ந்த ஜெயந்திபுரம் காவல் நிலையத்திற்கு முதல் பரிசுக்கான கோப்பை காவல் ஆய்வாளர் பூமிநாதன் பெற்றார். திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு இரண்டாம் பரிசிற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் பிரேமா பெற்றார். கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு மூன்றாம் பரிசிற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் சின்ன கமணனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.