முக்தாரின் குண்டர் சட்டத்தை நீக்குவதா ! இதுதான் உங்களின் ஊடக அறமா !!?
அடுத்தவரின் அந்தரங்கம் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து ஆபாசமாக விவாதிப்பது என்ற வழக்கம் கொண்ட சர்ச்சைக்கு உரியவர் முக்தார்”, ஆனாலும் கூட அவர் மீதான “குண்டர் சட்டத்தை” இரத்து செய்ய வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்ற (சென்னை பிரெஸ் க்ளப்) நிர்வாகிகள் குறிப்பாக அதன் பொதுச்செயலாளர் ஹாசிப் கோரிக்கை வைத்துள்ளார்.
எவர் மீதும் பொருத்தமற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது, பொய்ப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்வது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊடகர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது ஆகியவை ஒருபோதும் கூடாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.
ஆனால், ஊடகர்கள் மீது பொய் வழக்குப் போடுதல், குண்டர் சட்டம் பாய்ச்சுதல் ஆகியவை கடந்த திமுக ஆட்சியில் தலைவிரித்து ஆடிய வழக்கங்கள்.
ஊடகரின் வீட்டு சமையலறை, படுக்கையறை, முன்னறை ஆகியவற்றில் மலம் கலந்த சாக்கடை நீர் ஊற்றப்பட்ட….வரலாற்றில் கேள்விப்பட்டிராத அவலங்கள் நடைபெற்றதும் கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி ஆண்ட காலகட்டங்களில் தான்.
அவ்வளவு ஏன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒருதலைப் பக்கமாக, அரசியல் கட்சி சார்புடையதாக ஆகக்கூடாது, பத்திரிகையாளர் நலனுக்காக, கட்சி சார்பற்று இயங்க வேண்டும், மன்றத்திற்கு கிடைக்கும் நன்கொடை உள்ளிட்ட உதவித் தொகைகளை வறுமையில் வாடும் பத்திரிகையாளர் நலன்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்…வீண் விரயங்கள் செய்தல் கூடாது என்று கோரிக்கை வைத்துப் போராடிய அதே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் 22 ஆண்டுகால மூத்த, முதன்மை உறுப்பினரான வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது பொய் வழக்குப் புனைய வைத்து FIR பதிவு செய்ய வைத்ததும் அதே மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில்தான்.
அப்படி ஒரு பொய்ப் புகார் கொடுத்து பொருத்தமற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து FIR பதிய வைத்தது வேறு யாருமல்ல ….இன்று ஆபாச ஊடகர் முக்தாருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இதே சென்னை பத்திரிகையாளர் மன்றப் பொதுச் செயலாளர் திருவாளர்.ஹாசிப் அவர்கள்தான்.
இதுதான் உங்களின் பத்திரிகை ஊடக அறமா ஹாசிப் அவர்களே ?!
திருமதி. அலிஷா குறித்து முக்தாரின் ஆபாசக் ‘கருத்து’ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறும் ஹாசிப், ஆனாலும், அவர் மீது எடுக்கப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கை “அதீதமானது” என்கிறார்….
இந்த அக்கறையும் “அறமும்” ஹாசிப் அவர்களுக்கும், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கும்,ஏன் கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் போது வெளிவரவில்லை ?!
எம் மீது கொடுத்த பொய்ப் புகாரில் நான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஹாசிப் அவர்கள் உறுப்பினர் ஆவதற்கு முன்னரே 22 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளவன் என்கிற உண்மையை மறைத்து “யாரோ ஒரு நபர்” என்று ஒரு தெருபோக்கன் போல என்று என்னைப் பற்றித் தவறான தகவலைக் குறிப்பிட்டு கொடுத்து FIR பதிய வைத்தது “அதீதம்” இல்லையா ஹாசிப் அவர்களே !
அதைத் திரும்பப் பெறுவதாக உங்கள் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம் என்னிடம் தனிப்பட்ட முறையிலும், மன்றப் பொதுக்குழுவிவிலும் அனைவரின் முன்னிலையிலும் உறுதி கொடுத்து ஆறுமாதம் கடந்தும் வழக்கு திரும்பப் பெறாமல் இருப்பதுதான் உங்களின் பத்திரிகை ஊடகப் பாதுகாப்பு “அறமா ?!” ஹாசிப் அவர்களே !
உண்மையில் பத்திரிகை ஊடகங்கள் மீதான காவல்துறை புகார்கள் குறித்தும், வழக்கு குறித்தும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ?!
முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கைத் தூய்மைப் படுத்திவிட்டு பிறகு மன்றத்தின் உறுப்பினரே இல்லாத முக்தார் போன்ற அடுத்தவரின் அந்தரங்கம் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து ஆபாசமாக விவாதிப்பது என்ற வழக்கம் கொண்ட சர்ச்சைக்கு உரியவர்களுக்காகக் குரல் கொடுங்கள்
அன்புடன்,
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், முதன்மை உறுப்பினர் : சென்னை பத்திரிகையாளர் மன்றம். 18/6/26
(குறிப்பு : இந்தப் பதிவு சமூக ஊடகத்தில் இடப்பட்டதற்குக் காரணம், ஹாசீப்பும் எக்ஸ் ஊடகத்தில் முக்தாருக்கு ஆதரவான அந்தப் பதிவை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பெயரில் இட்டிருந்தார் என்பதால்).