கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பசியால் கதறி அழுத பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
ரெயில்வே தேர்வு எழுத மையத்துக்குள் தாய் சென்ற சமயத்தில் கதறி அழுத அவரது 2 மாத குழந்தைக்கு பெண் காவலர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.திருவனந்தபுரம் அருகே நகரூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ரெயில்வே தேர்வாணையம் சார்பில் தேர்வு நடைபெற்றது.
காலை 07:30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுக்கு திருவனந்தபுரம் பட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது 2 மாத பச்சிளம் குழந்தை மற்றும் கணவருடன் வந்தார்.பிறகு தேர்வு மையத்துக்குள் தாய் சென்றார். 2 மாத குழந்தையை அவரது கணவர் வைத்திருந்தார். அந்த சமயத்தில் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. அந்த அழுகையை நிறுத்த தந்தை அங்குமிங்கும் சென்றபடி தாலாட்டினார்.ஆனால் முடியவில்லை. விடாமல் தொடர்ந்து கதறி அழுதது. இதனால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்தார்.
அப்போது பணியில் இருந்த திருவனந்தபுரம் ரெயில்வே வடக்கு பிரிவில் காவலராக பணியாற்றி வரும் கொல்லத்தை சேர்ந்த ஏ.பார்வதி கவனித்தார்.உடனே அவர் அந்த குழந்தையை வாங்கி தனி அறைக்கு சென்று பால் கொடுத்தார். பசியாறியதும் குழந்தை அழுகையை நிறுத்தியது.பசியால் கதறி அழுத பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.சமூகவலைதளங்களிலும் காவலர் பார்வதிக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே இருக்கிறது.
பிறர் பெற்ற பிள்ளையை தன் பிள்ளை போல் பாவித்து,பசியால் கதறி அழுத பச்சிளம் குழந்தைக்கு தாய்மை உள்ளத்தோடு பாலூட்டி பசியாற்றிய, பாரதி கண்ட புதுமைப்பெண் பார்வதிக்கு நாமும் பாராட்டுக்களையும்,நன்றிகளையும் உரித்தாக்குவோம்.