திருமணத்திற்கு வரன் தேடும் பெற்றோர்களே இப்பதிவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது.நட்சத்திர பொருத்தம் தான் திருமண பொருத்தத்தை தீர்மானிக்கும் என்ற பழைய நடைமுறை மாறி இப்பொழுது ஜாதகம் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே என்ற நிலைக்கு மாறியுள்ளது.அப்படி இருக்கையில் ஒரு நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு இருவரின் ஜாதகத்தின் பொருத்தத்தை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும் ஆகவே தயவு செய்து அந்த தவறை எப்பொழுதும் செய்யாதீர்கள்.
மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா?ஆண் மூலம் அரசாளும்,பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா?
ஜோதிடத்தில் அடிப்படையாக ஒன்பது கிரகங்களும்,அவை அமைந்திருப்பதைப் பொறுத்து ராசி, லக்கினம்,நட்சத்திரங்கள் ஒருவருக்கு அமையும்.ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.இதில் 19வது நட்சத்திரமாக வரக்கூடிய சர்வ உத்தமமான நட்சத்திரம் தான் மூலம்.தனுசு ராசியில் வரக்கூடிய மூல நட்சத்திரத்திற்கு கேது பகவான் அதிபதி ஆவார்.அனைத்திற்கும் மூலமாக விளங்கக்கூடிய மூல நட்சத்திரம் பரம்பரை பாரம்பரியம் 14 தலைமுறைக்கு நீடிக்கும்.
ஒரு குடும்பத்தில் மூல நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போது.உங்கள் குடும்பம் 14 தலைமுறைகளுக்குக் கண்டிப்பாக நீடிக்கும் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
அனுமனின் நட்சத்திரம் :
உலகில் யாருமே செலுத்த முடியாத பக்தியை ஸ்ரீ ராமன் மீது செலுத்தியது அனுமன் தான்.சிவ பெருமானின் அம்சமாகவும்,மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக திகழ்ந்த அனுமன் பிறந்தது மூல நட்சத்திரத்தில் தான்.அப்படிப்பட்ட அனுமனை ராம ஜெயம் என கூறி வணங்கினால் எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிட மாட்டார்.
அழகான,அன்பான வாழ்க்கை துணை அமைய,தேவையான கிரக அமைப்பும் ஜாதகபொருத்தமும்,பயமறியாதவர்களும் தோல்வியை சந்திக்காத வெற்றியாளர்களாகத் திகழ்பவர்களும் மூலநட்சத்திரத்தினர். இப்படிப்பட்ட மூல நட்சத்திரத்தை தவறான மூட நம்பிக்கைகளை கூறி நிராகரிப்பது மிகவும் தவறு என்பதை உணர வேண்டும்.
மூல நட்சத்திர பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாதா?
சில மூட நம்பிக்கைகள் பல நேரங்களில் பெரிய சிக்கலாக வந்து சேரும்.அந்த வகையில் மூல நட்சத்திர பெண்ணை நிராகரிப்பது பெரிய தவறு என்று தான் கூற வேண்டும்.இந்த மூடநம்பிக்கை மேலும் வளர்ந்து தற்போது ஆண்களுக்கு மூலநட்சத்திரம் என்றால் கூட அதை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். அது தவறு அல்ல பாவச்செயல் என்பதை உணர வேண்டும்.திருமணத்தில் இணையக்கூடாத ராசிகள் – பொருத்தம் இருந்தாலும் இதை கவனிப்பது அவசியமாகும்.
ஆண் மூலம் அரசாளும்,பெண் மூலம் நிர்மூலம் என்பது சரியா?
ஆண் மூலம் அரசாளும்,பெண் மூலம் நிர்மூலம் என்ற தவறான சொற்றொடர் பழமொழி போன்று பின்பற்றி வருகின்றனர்.இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் ஆனி மூலம் அரசாளும்,பின் மூலம் நிர்மூலம் என்று தான் ஜோதிடம் சொல்லியிருக்கிறது.
விளக்கம் :-
ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனைப் போல வாழ்வார்கள்.பின் மூலம் என்றால், மூலம் 4வது பாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் நிர்மூலமாக்குவார்கள்.இது தான் உண்மையான காரணம்.ராசிப் பட்டியலில் 9வதாக வருவது தனுசு ராசி,ஒன்பதாக வீட்டில் முதல் நட்சத்திரமாக வரும் மூல நட்சத்திரம் பல்வேறு யோகங்களை வழங்கக்கூடியது.இதனால் பூர்விக சொத்துக்கள்,தந்தை வழியில் நல்ல ஆலோசனையும்,பரம்பரம்பரை பரம்பரையாகத் தொடரக்கூடிய ஆணி வேர் போன்றது தான் தனுசு ராசியின் மூல நட்சத்திரம்.
மூல நட்சத்திரம் அவ்வளவு உன்னதமா?
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகம் எழுத கூட அவசியமில்லை. அவர்களுக்கு நட்சத்திர பலன் பார்க்க அவசியமில்லை. எப்படிப்பட்ட மோசமான பலன் சொன்னாலும் பலிக்காது.இது ஒரு பரிசுத்தமான நட்சத்திரம்.மூல நட்சத்திர பெண்ணுடன் மூல நட்சத்திர ஆணை தாராளமாக சேர்க்கலாம் என்கிறது. ஜோதிடவிதி.தேவகுரு என்று அழைக்கப்படும் குருபகவானுக்கு சொந்தமான வீடு தனுசு.தனுசு ராசியின் முதல் நட்சத்திரம் மூலம்.
மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது. எனவே தனுசில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த மனோபலம் உள்ளவர்கள்.எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காண்பவர்கள்.கேதுவை ஞானகாரகன் என்று கூறுவதற்கேற்ப ஆத்ம ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்.தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.தெளிவான சிந்தனை உள்ளவர்கள்.நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள்.தங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.உண்மையாக நடந்து கொள்வதுதான் இவர்களின் முக்கிய குணங்களில் ஒன்று. நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.இவ்வளவு நல்ல அம்சம் பொருத்திய மூல நட்சத்திரக்கர்களை திருமணம் என்று வந்து விட்டால் வேண்டாமென்று விலக்கி விடுகின்றனர்.
உண்மை என்னவென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டால்,அவளுடைய நல்ல குண நலன்களைக் கண்டு,மெச்சுகின்ற அந்த வீட்டின் எஜமானர் ஆகிய அந்த பெண்ணின் மாமனார்,வீட்டின் பொறுப்புக்களை எல்லாம் மருமகள் கையில் ஒப்படைத்து விட்டு சன்னியாசியைப் போல் வாழத் துவங்கிவிடுவர்.இதைத்தான் மூல நட்சத்திரப் பெண் வீட்டிற்கு வந்தால் மாமனாருக்கு ஆகாது என்று குதர்க்கமாகக் கூறப்போய் சாஸ்திரங்கள் சொல்வதாகக் கதைகட்டி விட்டார்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன்,ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசியில் விழுகின்றது.கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடு.சந்திரன் மனோகாரகன் புதன் வித்யாகாரகன்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மனோதிடம் கொண்டவர்களாகவும்,மதிநுட்பம் மிக்கவர்கவர்களாகவும் இருப்பதோடு கணித வித்தையில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.இப்படிப்பட்ட பெண் வீட்டிற்குள் வந்தால் மாமியாரிடம் தன் திறமைகளை காண்பிக்கும் போது அவர்கள் மருமகளைவிட மாமியாரின் மதிப்பு குறைந்து விடுமோ என்று அச்சப்படச் சாத்தியமுள்ளதால், ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று வேண்டாத வதந்தியைக் கிளப்பிவிட்டனரோ என்று என்னத் தோன்றுகின்றது.
ஆயில்ய நட்சத்திரப் பெண்கள் சமையல் கலையில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.ஆக மருமகளின் சமையலைச் சுவைத்தவர்கள்,மாமியாரின் சமையலில் குற்றம் கண்டுபிடித்தால் பிரச்சினைதானே.இதுபோல சாஸ்திரங்கள் கூறாத பல விஷயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் மிகச்சில ஜோதிடர்கள் தான் இது போல குறிப்பிட்ட நட்சத்திரங்களை நிராகரிக்கச் சொல்கின்றனர். பெரும்பாலான ஜோதிடர்கள் உண்மையை எடுத்துக்கூறி திருமணங்கள் நடைபெற உதவுகின்றனர்.
ஒருபெண் வீட்டிற்கு மருமகளாக வந்தால்.மாமனார் ஆரோக்கியத்தைப்
பற்றித் தெரிந்து கொள்ள அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு,ஒன்பதாம் வீடு,அதாவது லக்கினத்திலிருந்து மூன்றாம் வீடு ஆராயப்பட வேண்டுமே தவிர,ஒரே ஒரு நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு ஆராயக்கூடாது.
கொடுமை என்னவென்றால் இப்பொழுது ஆயில்யம்,மூலம், கேட்டடை,விசாகம் போன்ற நட்சத்திரங்களுடைய ஆண் ஜாதகத்தையும் சிலர் நிராகரிக்கின்றனர் இவையெல்லாம் பரிகார வணிகத்தின் ஒரு பாகமாகும். ஆகவே மக்கள் விழிப்புணர்வு கொள்க.பழமொழி கேட்டு மகன்,மகள் வாழ்க்கையைப் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.ஜாதகப் பொருத்தமே இறுதியானது.
எனவே,பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு வதுவரன் அமைக்கும் போது மிகச் சரியான ஜோதிட விற்பன்னர்களை சந்தித்து,அவர்களுக்கு உண்டான தொகையை மறுக்காமல் கொடுத்து உங்கள் குழந்தைகளின் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களுக்கு தகுந்த ஜாதகங்களை மிகச் சரியாக ஆராய்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே உங்களின் தலையாய கடமையாகும்.
பல லட்சங்கள்,கோடிகள் செலவு செய்து திருமணத்தை செய்து வைக்கும் பெற்றோர்கள்,சரியான கணித முறையில் பொருத்தம் பார்த்து கொடுக்கும் ஜோதிடர்களுக்கு சில ஆயிரங்களை கொடுத்து பொருத்தம் பார்க்கத் தவறி விடுகின்றனர். இதனால்,பல திருமணங்களில் இணைந்த, இரு மனங்களின் வாழ்க்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.