தூத்துக்குடியில் விண்வெளி வாகன தொழில்நுட்பம் ., அமைச்சர் கீர்த்தனாவுக்கு முதல்வர் வாழ்த்து !!
தூத்துக்குடியில் ‘விண்வெளி வாகன தொழில்நுட்ப வசதி மையம்’ ஒப்பந்தம்; விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் கீர்த்தனா!
குலசேகரப்பட்டினம் ஏவுகணை தளம் அருகே தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், தூத்துக்குடி அல்லிக்குளத்தில் “விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம்” அமைக்கப்படவுள்ளது.
இதற்காகத் தமிழ்நாடு அரசின் டிட்கோ மற்றும் மத்திய அரசின் ‘இன்-ஸ்பேஸ்’ நிறுவனத்திற்கும் இடையே கடந்த வாரம் குஜராத்தில் கையெழுத்தான சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்த நகலை, தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா மற்றும் உயர்தர அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இத்திட்டம் தென் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா , தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், ஆகியோர் சந்தித்து, கடந்த 11.6.2026 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இணைந்து ,
தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் “விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (சி.டி.எஃப்)” அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ – TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் நிறுவனம் சார்பில் அதன் இணைச் செயலாளர் திரு.அனுபம் ஆனந்த், இ.ஆ.ப. ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், விண்வெளித் துறைச் செயலாளர், விண்வெளிக் குழுத் தலைவர் மற்றும் இஸ்ரோ தலைவர் முனைவர் வி. நாராயணன், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத் தலைவர் முனைவர் பவன் கோயங்கா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற 10-வது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் தொழில் மாநாட்டின்போது நடைபெற்றது.
இது, மாநிலத்தில், விண்வெளி உற்பத்திக்கான உலகத்தரச் சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின்படி, IN-SPACE நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கும்.
தமிழ்நாடு அரசு தேவைப்படும் நிலத்தை வழங்கி அதில் கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும்.
அதிர்வு, அதிர்ச்சி, வெப்ப-வெற்றிடம், மின் சார்ந்த குறுக்கீடு/ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம், சோதனை, ஏவுகணை வாகனக் கூட்டமைப்பு, உதிரிப்பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஹைட்ரோக்ளோவ் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகளை பயன்பாட்டிற்கு வழங்கும்.
இத்தகைய அதிக முதலீட்டுடன் அமைக்கப்படும் வசதிகள், தொழில்துறைக்கு விண்வெளி அமைப்புகள் மற்றும் உதிரிப்பாகங்கள் உருவாக்க, சோதிக்க, தரநிலை உறுதிப்படுத்த ஆகும் செலவையும் மற்றும் நேரத்தையும் குறைக்க உதவும்.
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தளம் அருகில் உருவாக்கப்படவுள்ள இந்த தொழிற்பூங்கா, ஏவுகணை வாகனக் கூறுகள், செயற்கைக்கோள் அமைப்புகள், இயக்க அமைப்புகள், வான்வழி மின்னணு அமைப்புகள், ஒருங்கிணைந்த பொருள் கட்டமைப்புகள் மற்றும் பிற முக்கிய விண்வெளி உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையமாக விளங்கும்.
இவ்வசதி, இத்தொழில் சூழலின் முதுகெலும்பாக விளங்கி, நாடு முழுவதும் இத்துறை சார்ந்த தொழில்களுக்கு உலகத் தரச் சேவைகளைப் பெற உதவும்.
இந்த முயற்சி, தனியார் முதலீடுகளை ஈர்க்க, உயர் தொழில்நுட்ப தொழில் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி, உள்நாட்டு தொழில் சூழலை வலுப்படுத்தி, விண்வெளித் துறையில் புதுமை முயற்சிகளை அதிகளவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், இம்முயற்சி இத்துறையில், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு வழிவகை செய்வதுடன், உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் போட்டித்திறனை உயர்த்தவும் உதவும்.
இந்தக் கூட்டு முயற்சி, உலகத்தர தொழில் சூழல்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் நோக்கத்தையும், புதிய துறைகளுக்கான அதிநவீன அடிப்படை வசதிகள் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகளை (Strategic Partnerships) ஏற்படுத்தும் முயற்சியையும் உறுதி செய்கிறது.
இவ்வசதி, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவிற்கு முக்கியப் பங்களிப்பாக விளங்கும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.