திருச்செந்தூரில் திருமணமான 3-வது நாளில் பணம், நகையுடன் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார்!??
திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தெரிந்த நபர் மூலம் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் அறிமுகம் ஆனார். அவரிடம் தனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து தருமாறு பாஸ்கர் கூறினார்.
அந்த நபர் நாகர்கோவிலை சேர்ந்த பெண் திருமண புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் உள்ளதாக கூறி, புகைப்படத்தை பாஸ்கரிடம் காட்டினர்.பாஸ்கர் தனக்கு பெண் கிடைத்த சந்தோசத்தில் ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து அந்த புரோக்கர்கள் மொத்தம் ரூ.40 ஆயிரம் தரவுக்கூலியாக பெற்று சென்றனர்.
பாஸ்கர் திருமணம் செய்யும் ஆசையில் அந்த பெண்ணுக்கு தேவையான சேலை, சுடிதார் உள்ளிட்ட ஆடைகள் என ரூ.10 ஆயிரத்திற்கு புதிய ஜவுளிகளை வாங்கி கொடுத்தார்.கடந்த 20ஆம் தேதி திருச்செந்தூர் துர்க்கை அம்மன் கோவில் முன்பு அந்த இளம்பெண் கழுத்தில் 4 கிராம் தங்கதாலியை பாஸ்கர் கட்டி எளிமையாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாஸ்கர் தனது வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்று குடும்பம் நடத்தினார்.
கடந்த 22ஆம் தேதி பாஸ்கர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வருவதாக கூறி திருச்செந்தூர் சென்றார்.பின்னர் வந்து பார்த்த போது வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், தனக்கு பெண் பார்த்து வைத்த புரோக்கர்களை தொடர்பு கொண்டபோது சரியான தகவல் தெரிவிக்கவில்லை. மனைவி கட்டிய தாலி, வீட்டில் இருந்த பணத்துடன் ஓட்டம் பிடித்ததும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதும் பாஸ்கருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.