ஆம்பூர் காவல் ஆய்வாளரின் அசத்தலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை.
சாலை விதிகளை மதிப்போம் விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்போம்.
பெ. மணிமாறன் @
சமூகப்பற்றாளன் ஞானச்சித்தன்
காவல் ஆய்வாளர்,
ஆம்பூர் போக்குவரத்து
காவல் நிலையம்,
திருப்பத்தூர் மாவட்டம்.
முன்னுரை:
நாளுக்கு நாள் மக்கள் தொகையின் விழுக்காடு பெருகிக்கொண்டே போகிறது மக்களின் விழுக்காடுக்கு
ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே போகிறது ஆனால் சாலை என்பது அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
மேடு பள்ளமுள்ள சாலை அல்லது மேடு பள்ளமற்ற சாலை போன்ற சாலையின் தரம், வாகன ஓட்டிகளின் கவனம், மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், வாகனங்களில் இயற்கையாக ஏற்படும் இயந்திரக் கோளாறு, சாலையின் குறுக்கே ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் திடீர் நடமாட்டம், எதிர்பாராத விதமாக வாகனங்களில் உண்டாகும் டயர் பஞ்சர் போன்ற பல்வேறு காரணங்களால் சாலையில்
சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமான இந்த காலகட்டத்தில்.
சாலை விபத்துக்கள் என்பது நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
தினந்தோறும்
செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகின்றோம்.
ஒரு போக்குவரத்து உதவி ஆய்வாளர் என்கிற அடிப்படையில் எனது அனுபவத்தில் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகளின் அலட்சியம் மற்றும் சாலை விதிகளை மதிக்காத காரணங்களால் மட்டுமே சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையே சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைகின்றன.
எனவே சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
1.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:
சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர். அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது.
அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சாலை விதிகளை அவசியம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
2.அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் இணைப்பு பாலமாக இருப்பது சாலைகள்.
நடைமுறையில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் ஏழை பணக்காரன் அரசு ஊழியர் வேலை இல்லாத நபர்கள் என்று எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பு
மக்களை இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகள். சாலைகளில் விபத்துகளின்றி விழிப்புணர்வுடன் பயணம் செய்வது அவசியம்.
மழைக்காலங்களில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்படுவது இயற்கையாகும் அச்சமயத்தில் வாகன ஓட்டிகள் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் எப்போதும் போல வாகனத்தை ஓட்டினால் அது விபத்தில் போய் முடியும் என்பதை நீங்கள் இத்தருணத்தில் அவசியம் உணர வேண்டும்.
அதேபோல வெயில் காலங்களில் சாலையில் உள்ள தார் ஆனது ஆங்காங்கே உருகி காணப்படும் அந்த இடங்களில் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும். குறிப்பாக நெடு தூர பயணங்களின்போது புழுதி வீசும் இடங்களில் கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும்.
மார்கழி தை போன்ற அதிகம் குளிர் நிறைந்த மாதங்களில் பனி படர்ந்துள்ள இடங்களில் மிக கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும்.
சாலை விதிகள், சட்டங்கள் என்பவற்றை கடைபிடித்து மற்றவர்களுக்கும் இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
3.சாலை விதிகள்:
சாலை விதிகள் சட்ட திட்டங்கள் என்பது மக்களை காப்பதற்காக தான் என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும்.
ஒரு வேலியானது வயலை பாதுகாப்பது போல நாட்டு மக்களை பாதுகாப்பது சட்டத்திட்டங்களே என்பதை முதலில் இச்சமூக மக்கள் அறிந்து புரிந்து தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புரிதல் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரும்பாலும் காவல் துறையினரோடு ஒத்துழைப்பு தராமல் முரண்படுகிறார்கள் ஆங்காங்கு சண்டை சச்சரவுகளை வேண்டுமென்றே உண்டாக்குகிறார்கள் அல்லது காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்கிறார்கள்.
சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல்,
வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

4.ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:
சிவப்பு வண்ண விளக்கு” நில்” என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு”புறப்படு” என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
சாலையில் உள்ள சாலை சந்திப்புகளில் பச்சை விளக்கு எரிந்து முடிந்த உடனே சிகப்பு விளக்கு மாறினால் அதைப் பார்த்து உடனே வாகனத்தை நிறுத்தினால் வாகன ஓட்டிகள் விழுந்து விடுவார்கள் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதை தவிர்க்கும் பொருட்டே மஞ்சள் விளக்கானது வருகிறது இந்த மஞ்சள் விளக்கு எரிகின்ற பொழுது மக்கள் அதைப் பார்த்து வாகன வேகத்தை குறைத்து சாலையில் போடப்பட்டுள்ள ஸ்டாப் லைன் எனப்படும் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை அடியோடு மறந்து இன்றைய காலகட்டத்தில் சமூகப் பொறுப்பற்று வாழும் மக்கள் அவசர அவசரமாக செல்வதாலும்,
மஞ்சள் விளக்கை காணும் பொழுது இன்னும் தனது வேகத்தை கூட்டி கொள்கிறார்கள் ஆனால் மஞ்சள் விளக்கை பார்க்கும் பொழுது தனது வேகத்தை குறைக்க வேண்டும் இவ்வாறு குறைக்கும் பொழுது விபத்துக்களும் தானாக குறையும் ஆபத்துக்களும் தானாக குறையும்.
போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது.
இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். பள்ளிகள்,மருத்துவமனை,முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.
அய்யன் திருவள்ளுவர் கூறியது போல,
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
என்பதை மனதில் வைத்து மக்கள் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே எனது ஆவல் ஆதங்கம் அக்கறையாகும்.
6.சமூக பொறுப்புள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டும்.
சாலை விதிகள், சட்டங்கள் என்பவற்றை கடைபிடித்து மற்றவர்களுக்கும் இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
அன்றாடம் பேருந்து,
மோட்டார் வண்டி போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் பயணிக்கின்றன.
அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அவசர வேலையை முடிப்பதற்காக சென்று கொண்டிருப்பர். இதனால் ஏதேனும் ஒரு வகையில் விபத்துக்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டவாறு உள்ளன.
விபத்துக்களுக்கான காரணங்களாக பல காணப்பட்ட போதும் விபத்துக்கள் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் போன்ற பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.
ஆகவே மனிதர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. நாம் காலையில் வீட்டிலிருந்து பயணப்பட்டு திரும்பவும் வீட்டை சென்றடைய வேண்டுமாயின் பயணிக்கின்ற சாலைகள் மட்டும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணாமல் நீங்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் சமூக பொறுப்பு ஆகும். சமூக பொறுப்பற்ற மக்கள் சமூக பொறுப்புள்ள மக்களாக மாறினால் சாலைவிபத்து மட்டுமல்ல அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் கல்வி,சுகாதாரம் பொருளாதாரம் போன்ற அனைத்திலுமே மாற்றம் என்பது நிச்சயம் பிறக்கும்.
7.சாலை விதிகளை மதித்து நம் தலைவிதியை கூட்டிக்கொள்ள வேண்டும்.
மோட்டார் சைக்கிள் வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது மிக மிக அவசியமாகும். காரணம் எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம்.
எனவே, தலையில் அடிபட்டால் இறப்புக்கான சாத்தியம் மிக மிக அதிகம் எனவே தலையை பாதுகாப்பது தலையில் அடிபடாமல் பாதுகாப்பது என்பது உயிர்ச்சேதம் ஏற்படாமல் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து தலைக்கவசத்தை அவசியம் அணிய வேண்டும்.
அதேபோல நான்கு சக்கர
வாகனங்களில் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது அரசு சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன..
1) சிவப்பு விளக்கை மீறுவது.
2) செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது.
3) குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது.
4) வேகமாக வாகனத்தை ஓட்டுவது.
5) சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவது.
6) சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டு போவது.
போன்ற ஆறு வகையான சாலை விதி மீறல் செய்யும் வாகன ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அவசியம் அறிய வேண்டும்.
முடிவுரை!
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்கின்ற அனைவருக்கும் நன்மை பயக்கும். எவ்வளவு அவசரமான பயணமாக இருந்தாலும் சாலைகளில் கவனம் வைத்து வாகனத்தை ஓட்டுவதே சிறந்ததாகும்.
சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை விதிமுறைகளை பின்பற்றி சாலையில் பயணிக்கின்ற அனைவரினதும் உயிரை காப்போமாக.
சாலை விதிகளை மதிப்போம்.!!! விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்போம்.!!!
பெ. மணிமாறன் @
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
காவல் ஆய்வாளர்,
ஆம்பூர் போக்குவரத்து
காவல் நிலையம்,
திருப்பத்தூர் மாவட்டம்.