டிஜிபி ரேங்கில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் புதிய டிஜிபி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி ஏற்றுக்கொண்டார். டிஜிபி நியமனத்தில் பல உயரதிகாரிகள் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
டிஜிபியை தேர்வு செய்யும் நடைமுறை:
தமிழ்நாட்டில் டிஜிபி அதிகாரிகள் ஓய்வு பெறும்போதும், புதிய டிஜிபி நியமனம் செய்யும் போதும், மாநில அரசு தற்போது பணியாற்றும் DGP ரேங்கில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும். அதன் பின்னர், அதிகாரிகளின் மூப்பு, சேவை அனுபவம், நேர்மை, பணித்திறன் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுக்கும்.
குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மேல் சேவை காலம் மீதமுள்ள அதிகாரிகள் மட்டுமே டிஜிபி பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். அதன் பின்னர், மாநில அரசு பரிந்துரைத்த பெயர்கள் UPSC-க்கு அனுப்பப்படும். UPSC விதிமுறைக்கு ஏற்ப 3 மூத்த அதிகாரிகளின் பெயர் பரிசீலிக்கப்பட்ட பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பப்படும்.
இறுதியாக UPSC பரிந்துரைத்த 3 பேர் பட்டியலில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வு செய்து தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கும். ஆனால், இந்த முறை பழைய நடைமுறையை பின்பற்றி பட்டியலை Upscக்கு மாநில அரசு அனுப்பாத நிலையில் வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
டிஜிபி ஓய்வும்.. பொறுப்பு டிஜிபி பதவியேற்பும்..

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகவும் இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ஓய்வுப்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து டிஜிபி பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்க, கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக காவல் துறையின் நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிபி ரேங்க் அதிகாரிகள் புறக்கணிப்பு:
இந்த நிகழ்ச்சியில் காவல் துறையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் டிஜிபி ரேங்கில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட வன்னியப்பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பங்கேற்கவில்லை.
வழக்கமாக உயர்மட்ட நியமன நிகழ்ச்சிகளில் மூத்த அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் வராதது காவல் துறை உயரதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பொறுப்பு டிஜிபி பதவி ஏற்பில் பல உயரதிகாரிகள் மன வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.