காவல்துறை பணி என்பதே மிகவும் கடுமையான பணியாகும். அதிலும் பெண் காவலர்கள் இரவு நேரங்களில் பணி செய்வது என்பது மிகவும் கடுமையாகவே இருக்கும் சூழலில், தன் உயிரை துச்சமென நினைத்து இரு உயிர்களை காப்பாற்றி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தன் கடமையை செவ்வனே செய்துள்ளார், பெண் காவல் சார்பு ஆய்வாளர் திருமதி தரணியா அவர்கள்!
தூத்துக்குடியில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த போது தன் உயிரை பணையம் வைத்து அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து நிறுத்தி துரிதமாக செயல்பட்ட பெண் சார்பு ஆய்வாளருக்கு காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. தரணியா (11.08.2025) அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு மஹால் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனைக் கண்ட பெண் காவல் சார்பு ஆய்வாளர் தரணியா, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து, காயம்பட்ட இருவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து துரிதமாக செயல்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவிடாமல், காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் தரணியாவை (12.08.2025) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
பெண் காவல் சார்பு ஆய்வாளர், திருமதி. தரண்யா அவர்களின் செயலை கண்டு வியந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பாராட்டி வருகின்றனர்.