குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி! சொந்த ஊரில் மக்கள் பெரு மகிழ்ச்சி!!

by ஆசிரியர்
Reading Mode

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி ! சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டம்!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், அவரது சொந்த ஊரான சந்திராபுரத்தில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மொத்தம் 752 பேர் வாக்களித்தனர். இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

உறவினர்கள் நெகிழ்ச்சி

முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், சந்திராபுரம் பகுதியில்      பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிபிஆர் எப்படியும் வெற்றி பெறுவார் என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். மேலும் அவர் பிறந்த பாரம்பரிய வீட்டில் யாரும் வசிக்காத நிலையிலும், சி.பி.ராதாகிருஷ்ணனின் அடையாளமாக அந்த வீட்டை பார்க்க முடிகிறது எனவும் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

எளிமையான மனிதர்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நடராஜ் என்ற முதியவர் கூறுகையில், “சி.பி.ராதாகிருஷ்ணன் சிறு வயதில் இங்கு தான் விளையாடினார். சி.பி.ஆரின் குடும்பத்தினர் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள். அவர்களது வீடு இந்த பகுதியில் அப்போது பெரிய வீடு. அங்கு தான் எல்லாருடைய நல்லதும், கெட்டதும் நடக்கும். சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி., ஆளுநராகி அரசியலில் உச்சத்திற்கு போன பின்பும் கூட, எங்களிடம் எளிமையாக பழகினார். இங்குள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தான் அனைத்து காரியங்களுக்கும் செல்வார்,” என்றார்.

மேலும் நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், “அந்த வகையில், எம்.பியாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, ஆளுநர் ஆவதற்கு முன்பு என முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் சென்றார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக அவர் வெற்றி பெறுவார். அவர் வாழ்ந்த வீடு இன்னும், அவருடைய பேர் சொல்வதாக நிலைத்துள்ளது” என்று நடராஜ் கூறினார்.

பொதுமக்களுக்கு அன்னதானம்

முன்னதாக, குடியரசு துணைத்தலைவர் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ஆர் எனும் சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் சார்பில் வாலிபாளையம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரத்தில் சி.கே.பொன்னுசாமிக்கும், கே.ஜானகிக்கும் 1957 அக்டோபர் 20 ஆம் தேதி மகனாக பிறந்தார் ராதாகிருஷ்ணன். ஆரம்ப கல்வியை திருப்பூர் மத்திய பகுதியில் உள்ள அரண்மனைப் புதூர் அரசுப் பள்ளியிலும், மேல்நிலை கல்வியை திருப்பூர் கே.எஸ்.சி பள்ளியிலும் முடித்தார்.

இளமைப் பருவத்தில் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும் திகழ்ந்துள்ளார். தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள வி.ஓ. சிதம்பரம் கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை (BBA) பட்டம் பெற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக இரண்டு முறை கோவை தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பியாகவும் இருந்துள்ளார். தற்போது, மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00