உடைப்பதற்கு ஒரு நொடியும் ! உடையாமல் காப்பதற்கு ஒரு ஆயுளும் தேவைப்படுகிறது !! அந்த ஆயுள் காலப்பயணத்திற்கு பெயர்தான் காதல் !!!
காதல் என்பது,
உன் செல்போனின் பாஸ்வேர்டை
தயக்கமில்லாமல் அவளிடம் சொல்வது.

நினைத்தால்,
உன் டைரிக் குறிப்புகளையும்,
புகைப்படங்களையும்,மொத்த ஞாபகங்களையும்
ஒரே நொடியில் அழித்துவிடும் அதிகாரம் அது.
முன்பெல்லாம் என் இரவுகளுக்கு
இரட்டைக் கதவுகள் இருந்தன;
இப்போது உன் ஒற்றை வார்த்தையில்
எளிதாய் திறக்கின்றன.
என் சுவரில் நீ அடிக்க நினைக்கும்
எந்த ஆணியையும் நான் தடுப்பதில்லை…

அது அழகான புகைப்படத்தை தாங்கலாம்
அல்லது சுவரில் ஒரு நிரந்தர காயத்தை
உண்டாக்கிவிட்டுப் போகலாம்.
நெரிசல் மிகுந்த பேருந்தில்,
என் பணப்பையை உன்னிடம் கொடுத்துவிட்டு
நிம்மதியாக நிற்பது போல…
திருடர்கள் சுற்றும் நகரத்தில்,
என் வீட்டுச் சாவியை
உன் கையில் தருவது போல…
காதல் என்பது,
அபாயம் நிறைந்த இடத்தில் வைக்கப்படும்
அசைக்க முடியாத நம்பிக்கை.
என்னைச் சிரிக்க வைக்கும் உன் வார்த்தைகளுக்கும்,
என்னைச் சிதைத்துவிடும் உன் மௌனத்திற்கும்
ஒரே அகராதிதான்.
எந்தப் பக்கத்தைப் புரட்டுகிறாய் என்பதில்
முடிவாகிறது அன்றைய என் இரவு.

நீ பாதியில் நிறுத்திவிட்டுப் போன வாக்கியத்தை
நான் என் கண்ணீரால் எழுதி முடிக்கிறேன்.
எந்த வார்த்தை சொன்னால் நான் உடைந்து போவேன்,
எந்தப் பார்வை பார்த்தால் நான் நொறுங்கிப் போவேன்
என்பது உனக்குத் தெரியும்.
உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம்
அணு ஆயுதம் இல்லை…
ஒருவர் நம் பலவீனங்களை அறிந்து வைத்திருப்பதுதான்.
அந்த ஆயுதக் கிடங்கின் சாவியை
நானே உனக்குப் பரிசளித்திருக்கிறேன்.
கூர் தீட்டிய கத்தியைப் போன்றது காதல்.
அதைக் கொண்டு காய்கறியும் நறுக்கலாம்,
கழுத்தையும் அறுக்கலாம்.
நீ சமையலறையில் மட்டும்தான்
அதைப் பயன்படுத்துவாய் என்ற நம்பிக்கையோடு
என் ஒவ்வொரு தினசரியையும் தொடங்குகிறேன்.
கொஞ்சம் குடித்த தேநீர்க் கோப்பையை
மேசையில் வைத்துவிட்டுச் செல்கிறேன்,
திரும்பி வருவதற்குள் அது அங்கேயே இருக்கும் என்ற நம்பிக்கையில்.
நம் மொத்த உரையாடல்களையும் அழிக்கும் ‘டெலிட்’ பட்டன்
உன் விரல் நுனியில் இருக்கிறது…
ஆனாலும் நீ அதை அழுத்த மாட்டாய் என்ற நம்பிக்கையில்
நான் நிம்மதியாக உறங்குகிறேன்.
உடைப்பதற்கு ஒரு நொடியும்,
உடையாமல் காப்பதற்கு ஒரு ஆயுளும் தேவைப்படுகிறது.
அந்த ஆயுள் காலப் பயணத்திற்குப் பெயர்தான்
காதல்.
அந்தப் பயணத்தில் உன் கைப்பிடித்து நடக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு
ஒரு மறுபிறப்பு.
வலிகள் /வரிகள் ராஜவர்மன்