முகமூடித் திருமணம்
(அழிக்க முடியாத ஆழமான காயம்)
வாசல் கதவைத் தட்டியது நீங்கள்,
“நல்ல குடும்பம்” என்று நம்ப வைத்ததும் நீங்கள்.
உங்கள் வார்த்தை தேன் தடவிய கத்தி என்பதை அறியாமல்,
என் மொத்தக் குடும்பமும் உங்களை நம்பியது.
நான் நீட்டிய கை, என் வாழ்க்கைத்துணையைப் பற்றிக்கொள்ளும் என்று நினைத்தேன்,
ஆனால் அது
என் குரல்வளையை நெரிக்கும் கயிறு என்பதை அப்போது நான் உணரவில்லை.
⸻
என் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தில்,
உன் போலிச் சிரிப்பு தினமும் என்னைப் பார்த்தது.
நான் அதை உறவின் அழகு என்று நம்பினேன்…
ஆனால் நீயோ,
நான் அறியாமல் கட்டியிருந்த சிறையின் சுவரில்
தினமும் ஒரு ஆணி அடித்துக்கொண்டிருந்தாய்.
நீ பால்கனிக்குச் சென்று ரகசியங்கள் பேசியபோது,
“அவள் தோழிகள் தான்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஒரே படுக்கையில் படுத்திருந்தும், நமக்குள் ஒரு யுகத்தின் தூரம் இருந்தது.
என் பேச்சுக்கள் சுவரில் பட்டு என்னிடமே திரும்ப வந்தன.
உன் மௌனத்தை, “புது வீட்டு கூச்சம்” என்று மொழிபெயர்த்த
என்னை விட ஒரு அப்பாவி இருக்க முடியுமா?
⸻

சின்னச் சின்ன சண்டைகள் வரும்போது கூட,
“பாவம், அவள் பெற்றோரின் அழுத்தத்தில் இருக்கிறாள்” என்று நினைத்தேன்.
அந்தக் கைதியைக் காப்பாற்றப் போராடும் இன்னொரு கைதியாக நான் இருந்தேன்.
‘தைரியமாய் இரு’ என்று உனக்கே நான் அறிவுரை சொன்னேன்.
ஆனால் நீயோ, உன் சிறைக் காவலர்களுடன் சேர்ந்துகொண்டு,
என் விடுதலைக்கே வேட்டு வைத்தாய்.
⸻
ஒருநாள், பழுப்பு நிறக் காகித உறை வந்தது.
கைகள் நடுங்கப் பிரித்தேன்…
கணவன், மனைவி என்கிற இடத்தில்,
மனுதாரர், எதிர் மனுதாரர் என்று இருந்தது.
அன்பு, பாசம், காதல் எல்லாம் அழிந்துபோய்,
அச்சிடப்பட்ட சட்ட வார்த்தைகள் மட்டும் மிஞ்சியிருந்தன.
என் வாழ்க்கையின் தீர்ப்பை, யாரோ எழுதி அனுப்பியிருந்தார்கள்.
⸻
பிறகுதான், பிசிறு பிசிராய் வந்த செய்திகள்
ஒரு முழுப் பொய்யை எனக்குள் நெய்தன.
எனக்கு முன்பே உன் வாழ்க்கையில் இன்னொருவர் இருந்திருக்கிறார்.
நான்
உங்கள் குடும்பக் கௌரவச் சுவரில்,
வேலை முடிந்ததும் கழற்றி எறியப்படும்
ஒரு தற்காலிக ஆணி.
⸻
இன்று நீ உன் காதலனுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.
அந்தக் கதையில் நீயே கதாநாயகி.
திருமணமென்ற வார்த்தையே இப்போது எனக்கு கசக்கிறது.
இரவின் நிசப்தத்தில் எப்போதும், ‘நான் என்ன பாவம் செய்தேன்?’ என்ற கேள்வி மட்டுமே கேட்கிறது.
எந்தத் தவறும் செய்யாத நான்
உங்கள் எல்லோரின் கதையிலும் ஒரு முட்டாளாகி, ஒரு வில்லனாக மாறிவிட்டேன்.
⸻
உங்கள் நாடகம் முடிந்துவிட்டது.
கைதட்டல்களும் ஓய்ந்துவிட்டன.
ஆனால் திரை விழுந்த பின்பும்,
அரங்கத்தை விட்டு வெளியேறத் தெரியாமல்,
இருட்டில் தனியாக நிற்கிறேன் நான்.

வலிகள் / வரிகள்
ராஜவர்மன்