அகிலம் போற்றும் கல்வித்தந்தை “ராஜா சர் அண்ணாமலை” செட்டியார் !!?
ராஜாவாக உயர்ந்து தெய்வமாக மாறிவிட்ட அந்த மகாத்மா கானாடுகாத்தான் அண்ணாமலை செட்டியார் அவர்கள். வாழ்க அவரது புகழ் ! வளர்க அவரது கல்விக் கொள்கை !!
சிதம்பரம் நடராஜரை குலதெய்வமாக கொண்ட
அண்ணாமலை செட்டியார் என வரலாற்றில் நின்றுவிட்ட பெருமகன் அவர், கானாடு காத்தான் எனும் செட்டிநாட்டு கிராமத்தில் 1881இல் பிறந்தவர் அவர், சைவத்தில் தீவிரமான அக்குடும்பம் அண்ணாமலை எனும் பெயரை அவருக்கு இட்டது.
செட்டிநாட்டிலே இளமை கல்வியினை தன் குலத்துக்கேற்ற வியாபார கல்வியாக முடித்த அவர் செட்டியாரின் வைசிக தர்மபடி கிழக்காசியா தொடங்கி ஐரோப்பா வரை வியாபாரத்தில் நிறைய சம்பாதித்தார், கப்பல் கப்பலாக செல்வங்கள் அவருக்கு குவிந்தன, பெரும் வியாபாரி எனும் பெயரினை 30 வயதிலே பெற்றார்.அந்த அளவு அவரின் வியாபாரத்தில் புத்தி கூர்மையும் இருந்தது
உலகெங்கும் அவர் சென்று வந்ததால் பெரும் அனுபவம் அவருக்கு இருந்தது, அந்த அனுபவத்தை மக்கள் நலனில் செலுத்த வேண்டி, நவீன உலகோடு மக்களை இணைத்து முன்னேற்ற வேண்டி மக்கள் கேட்டுகொண்டார்கள், அப்போது உள்ளாட்சி முறை அறிமுகமாகி இயிருந்தது, கணவான்களும் படித்தவர்களும் குற்ற பின்னணி இல்லாதவர்களுமே மக்கள் பிரதிநிதிகளாய் அமரமுடியும்.
அப்படி காரைக்குடி நகராட்சி மன்ற தலைவராக அவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டார், அதிலிருந்து துவங்குகின்றது அவரின் பொதுவாழ்வு.
அவரின் துல்லிய நிர்வாகமும் ஈடில்லா பக்தியுடன் கூடிய பொதுவாழ்வும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன “செட்டி நாட்டு அரசர்” என்ற பட்டம் அவருக்கு தேடி வந்தது, ராவ் பகதூர், திவான் பகதூர் என பிரிட்டிஷாரும் பட்டம் அளித்தனர்.
1916ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1921 ஆம் ஆண்டு டெல்ல்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் , அங்கே மும்முறை அந்த பதவியில் இருந்தார்
அன்றைய காலத்தில் பெரும் அந்தஸ்தில் இருப்பவர்கள் இருந்த கட்சியான “லிபரல் கட்சி” அவரை சேர்த்து கொண்டது.
தன் குலதெய்வம் உறையும் சிதம்பரத்தில் ஒரு பள்ளி தொடங்கினார், அப்படியே மதுரையில் 1920ல் “ஸ்ரீ மீனாட்சி கல்லூரி”யினை மகளிருக்காக துவக்கினார், இன்று அது அரசு கல்லூரியாக பெண்களுக்கு கல்வி அளித்து கொண்டிருக்கின்றது.
1912இல் அவர் ஆரம்பித்ததுதான் “இந்தியன் வங்கி”. இன்றும் எந்த சர்ச்சையிலும் இல்லாமல் அது மக்களுக்கு நல்ல பயனை கொடுத்து கொண்டிருக்கின்றது, அதனால் பலனடைந்தவர்கள் கோடான கோடி.
நகரத்து செட்டியார்கள் கோவில் திருப்பணிகள், சமஸ்கிருத வேதபாடசாலை என இந்து சேவை பணிகளுக்கு பெயர் போனவர்கள், அன்ணாமலை செட்டியார் இதையும் செய்து அதனோடே கல்வி பணி மருத்துவபணி என அடுத்த நிலைக்கு சென்றிருந்தார்.
அவர் தமிழின் தொன்மையான சுவடிகளை காக்கவும் இன்னும் ஆய்வுகளை செய்யவும் , தமிழ் சுவடிகளை புதுப்பிக்கவும் தமிழை காக்க தனி கல்லூரி அவசியம் என்பதை உணர்ந்தார், தமிழ் அறிவுடமை சொத்துக்களை காக்க 1927இல் சிதம்பரத்தில் வடமொழிக் கல்லூரியும், தமிழ்க் கல்வியும் துவக்கினார்.
அப்படியே இசைகல்லூரியும் துவங்கிற்று, 1928இல் அவர் இதனை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பல்கலைகழகம் துவங்க தீர்மானித்தார், 1929ல் அதற்கான அனுமதி கிடைத்தது.
அதிலிருந்து அண்ணாமலை பல்கலைகழகம் சிதம்பரத்தில் உருவானது, இன்று எல்லா வகைக் கல்வியும் மருத்துவக் கல்வி வரைக்கும் பெரும் பல்கலைகழகமாக அது நிலைபெற்று நிற்கின்றது.
இதன் பின்பே பிரிட்டிஷ் அரசு “ராஜா” பட்டத்தை அளித்தது, அவர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார் என்றானார்.அவரின் இன்னொரு மகா முக்கிய சாதனை இசை உலகை உயிர்பெற செய்தது, சண்முகம் செட்டியாரோடு அவர் இணைந்து பெரும் மண்டபங்களை இசைக்கென கட்டிதந்தார், இசை கலைஞர்களை ஊக்குவித்தார்.
சுமார் ஆயிரம் தமிழிசை பாடல்கள் வெளிவர பெரிதும் பாடுபட்டவர் அண்ணாமலை செட்டியார், திறமையான கலைஞர்களை ஊக்குவித்து பாடவைத்து இசை அமைப்பாளர்களை ஊக்குவித்து அவர் செய்த புரட்சிதான் பின்னாளில் கச்சேரிகள், இசை மேடைகள் என வளர்ந்தன, மார்கழி மாத இசைமேடைகளெல்லாம் அவர் தொடங்கி வைத்த சாதனை.
ராஜா அண்ணாமலை மன்றம் அவரால் தொடங்கபட்டு இன்றளவும் இசைக்கோர் மண்டபமாக நிற்பது தொடரும் பெரும் வரலாறு.
அவரின் மகனான முத்தையா செட்டியார் சென்னையிலும் இன்னும் தமிழகமெங்கும் இசைக்கான மண்டபங்களை தன் தாய் ராணி சீதை பெயரிலும் தன் பெயரிலும் துவக்கினார், இசைக்கென உருவான மண்டபங்கள் அவை.
கூர்ந்து பார்த்தால் பழைய பாண்டிய மன்னன் ஒருவனின் மறுபிறப்பு அவர், சரியான காலத்தில் வந்து ஒரு அரசன் செய்ய வேண்டிய கல்வி பணி, மருத்துவ பணி, தமிழ் பணி, இசை பணி என எல்லாமும் செய்துவைத்த பெருமகன் அவர்.
பணம் எல்லோரிடமும் இருக்கலாம் ஆனால் அதனை பொது நலத்துக்காய் செலவிடுவது எல்லோருக்கும் வராத மனம், அது பூர்வ ஜென்ம வாசனையாலே வரும் குணம்.
தானும் வளர்ந்து இந்த மண்ணையும் மக்களையும் வளர்த்து எதிர்காலத்தில் பெரும் கல்வியும் வாய்ப்பும் வசதியும் மருத்துவமும் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்தவர் அவர், தமிழ் காக்க அதன் தொன்மை மகத்துவம் காக்க முத்தமிழையும் காக்க பாடுபட்ட மிக சிறந்த தமிழ்குடி தலைவன் அவர்தான்.
இசைல்தமிழ், இயல் தமிழ், நாடகத்தமிழ் என மூன்றையும் மரபு மாறாமல் அவர் வளர்த்தார், அழியவிடாமல் காத்தும் கொண்டார் உ.வே.சா போல, ஆறுமுக நாவலர் போல ஏட்டில் இருந்த சுவடிகளை அச்சுக்கு கொண்டு வந்ததிலும் பெரும் பங்கு இவருக்கு உண்டு.
தமிழகத்தில் சிதம்பரம் பல்கலைகழகம் முதல், மீனாட்சி கல்லூரி முதல் ஏகபட்ட கல்லூரிகள் வடிவிலும் , இசைதமிழ் ஒலிக்கும் அவரின் மண்டபங்களிலும் இன்னும் அவர் செய்த பெரும் திருப்பணிகளிலும் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவையெல்லாம் அவர் வாழும் ஆலயங்கள், ராஜாவாக உயர்ந்து தெய்வமாக மாறிவிட்ட அந்த மகாத்மா வாழும் தேவாலயங்கள்.
இன்னும் எத்தனையோ எண்ணிலடங்கா சேவைகளை செய்த மாபெரும் மகான் அண்ணாமலை செட்டியார் அவர்களின் புகழ் இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்து சமயத்தின் இரு கண்களாக விளங்கும் சைவ , வைணவ சமயத்திற்கான ஆலயங்கள் , கூட கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டு இந்து சமயத்தை காத்து நிற்கும் பணியிலும், கல்விக்கும் , நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஈட்டி கொடுத்த பங்கிலும், மக்களுக்கான தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக பெருங்குளங்களையும், குட்டைகளையும் உருவாக்கித் தந்ததிலும், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கித் தந்ததிலும் பெரும் பங்கு நகரத்தார் சமுதாயத்திற்கே உண்டு ஒன்றை உருவாக்கி உலகிற்கு அர்ப்பணிப்பதில் மிகச் சிறப்பு பெற்ற சமுதாயம் நகரத்தார் சமுதாயமே. வாழ்க நகரத்தார்கள் ! வளர்க நகரத்தார்களின் தொண்டு……