காலத்தின் கணக்கு! குணங்கள் எல்லாம் தோற்றுப் போச்சு!! காகிதம் தானே கடவுள் ஆச்சு!!!?

by ஆசிரியர்
Reading Mode

காலத்தின் கணக்கு!!
குணங்கள் எல்லாம் தோற்றுப் போச்சு,
காகிதம் தானே கடவுள் ஆச்சு!

அந்தக் காலம்…
அது இறைவன் வாழ்ந்த இல்லம்.
மனிதனின் முகவரி மனமாக இருந்தது,
இதயம் என்பதே ஆலயமாக ஒளிர்ந்தது.
குணத்தை வைத்தே குலத்தை அளந்தனர்,
உறவுகள் அங்கே சந்தையில் விற்கப்படவில்லை.
“நல்லவன்” என்றொரு வார்த்தையே போதும்,
நாளைய உலகம் அவன் கையில் என்றனர்.
அன்றொரு நாளில்…
ஈரம் கொண்ட ஒரு விழியே போதும்,
இல்லத்தின் கதவுகள் தாமாய்த் திறந்து கொள்ளும்.
பகிர்ந்துண்ட ஒருவேளை உணவே,
பல்லாயிரம் யாகத்திற்குச் சமமாகும்.
புன்னகை என்பதே ஒரு மந்திரம்,
அது பகையை விரட்டிடும் தந்திரம்.
நீட்டிய ஒரு விரல் உதவியிலே,
தெய்வத்தைக் கண்டனர் மானிடரே.
இந்தக் காலம்…
இது காகிதம் ஆளுகின்ற உலகம்.
குணத்தின் தராசை உடைத்துவிட்டனர்,
பணத்தின் நிறையை மட்டுமே கேட்கின்றனர்.


கொலைஞன் கையிலும் காசிருந்தால்,
கோபுரக் கலசம் அவன் தலையில் ஏறுகிறது.
நல்லவன் வீட்டில் நல்உறவு என்றால்,
அவன் தெருவில் கிடக்கும் தேங்காயடா!
இன்றைய நாளில்…
புன்னகை கூடப் பூப்பதில்லை,
பொற்காசின் சத்தம் கேட்காத வரையில்.
பாசத்தின் கதைகள் பேசப்படுவதில்லை,
பணத்தின் தாள்களைப் பார்க்காதவரையில்.
காதல் தெய்வீகம் என்பதெல்லாம்,
காகித நோட்டுக்கு அடிமையடி!
அன்பின் விலையைக் கேட்கிறது இந்த உலகம்,
அதை விற்கவும் துணிந்துவிட்டான் மனிதன்.

காலம் இங்கே தலைகீழாய்ப் போச்சு,
கணக்குகள் எல்லாம் மாறிப்போச்சு.
மனிதனின் முகத்தை யாரும் பார்ப்பதில்லை,
அவன் கையில் உள்ள பணத்தையே பார்க்கின்றான்.
குணங்கள் எல்லாம் தோற்றுப் போச்சு,
காகிதம் தானே கடவுள் ஆச்சு!

                  வரிகள் / ராஜவர்மன்

                                    

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00