குழந்தை வரம் அருளும் உக்கிர மாகாளியம்மன் ! இந்த ஆலயம் எங்கு உள்ளது தெரியுமா !!?

by ஆசிரியர்
Reading Mode

குழந்தை வரம் அருளும் உக்கிர மாகாளியம்மன் ! இந்த ஆலயம் எங்கு உள்ளது தெரியுமா !!?

திருச்சி தென்னூரில் உள்ளது ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயம், வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில், ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம். இடது புறம், சாம்புகாமூர்த்தியின் தனிச் சந்நதி உள்ளது.

வலதுபுறம், மகாவில்வமரம் பல நூறு தொட்டில்களை சுமந்த வண்ணம் காட்சி தருகின்றது. அடுத்து மகாமண்டபம், பளிங்கு கற்களால் தளம் அமைக்கப்பட்டு பளபளவென காட்சி தருகிறது. மண்டபத்தின் நடுவே சூலம், பீடம், சிம்மம் ஆகியவை மூலவரின் எதிரே அமைந்துள்ளன. மகாமண்டபத்தை அடுத்து உள்ள கருவறை நுழைவாயில் இருபுறமும் நெடிதுயர்ந்த துவாரபாலகிகளின் சுதை வடிவத் திருமேனிகள் அலங்கரிக்க, மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அரக்கன் மகிஷனை வதம் செய்யும் திருக்கோலத்தில் அன்னை அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.

அன்னை உக்கிரமாகாளியம்மனுக்கு எட்டு கரங்கள். வலது கரங்களில் சூலம், அம்பு, வஜ்ரம், சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய அன்னை தன் இடது கரங்களில் வில், கட்சம், சங்கு, கபாலம் ஆகியவைகளை ஏந்தி காட்சி தருகிறாள். அன்னையின் இடது புறம் சந்தனக்கருப்பு சாமியும், வலதுபுறம் உற்சவ அம்மனும் தனி சந்நதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள ஸ்ரீ உக்கிரகாளியம்மனும், இங்குள்ள ஸ்ரீ உக்கிரமாகாளியம்மனும் ஒரே உருவத்தில் தோற்றம் அளிப்பது வியப்பிற்குரிய தகவலாகும்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முற்கால சோழ வம்சத்தினரால் வழிபட்டு வந்துள்ளது.

காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றத்தால் இக்கோயில் சிதைந்து போனதாகவும், பின்னர் ஊர் மக்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

பங்குனி மாதம் இங்கு 15 நாட்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்னை வீதியுலா வருதல், தேரோட்டம், குட்டி குடித்தல், அருள்வாக்கு கூறுதல், மஞ்சள் நீராட்டு, விடையாற்றி என திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து திருவிழாவில் பங்கு பெறுவார்கள்.

அப்போது அன்னைக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும். சித்திரை மாத பெளர்ணமி அன்று அன்னைக்கு ராஜமகா அபிஷேகம் நடைபெறும். அன்று சுமார் ஆயிரம் லிட்டர் பாலுடன் மஞ்சள் பொடி, திரவியப்பொடி, சந்தனம், பன்னீர்,இளநீர் போன்றவைகளுடன் பிரமாண்டமாக அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை காண பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்.

குழந்தைப்பேறு இல்லாது தவிக்கும் தம்பதியர், அன்னையிடம் வந்து தங்களது குறைகளை முறையிடுகின்றனர். கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கின்றனர். அதன் பின், தன்னுடன் கொண்டு வந்திருக்கும் சிறிய மரத்தொட்டிலை அன்னையின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் இருக்கும் மகா வில்வ மரத்தில் கட்டுகின்றனர். சுமையை அன்னையிடம் இறக்கி வைத்த மன நிறைவுடன் இல்லம் திரும்புகின்றனர். விரைவில், அவர்களது பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டுகிறது.

இந்த ஆலயம் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 வரையிலும் திறந்திருக்கும்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து (பழைய பேருந்து நிலையம்) 2 கி.மீ. தொலைவில் உள்ள தென்னூர் அண்ணா நகரில் உள்ளது, இந்த ஆலயம்.

மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்னூர் வரை நகர பேருந்து வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு. மேலும், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் (புதிய பேருந்துநிலையம்) இருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00