மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி?

by ஆசிரியர்
Reading Mode

மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி?

தி.காங்கிரஸ் பிளவுப் பின்னணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி.ஆனால், தற்போது அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேரை முதல் முறை எம்எல்ஏவான ஒருவர் பிரித்து சென்றுள்ளதோடு மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார்.

அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்து முதல் முறை எம்எல்ஏவான உடன் அடுத்த 4 வாரங்களுக்குள் மம்தா பானர்ஜியையே ஏமாற்றி 60 எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தியது எப்படி?என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டில் அரசியலில் ஆளுமை மிக்க பெண் தலைவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளன. பெண்களும், ஆண்களுக்கு நிகராக ஆளுமை தன்மை கொண்டிருந்தாலும் கூட அரசியலில் சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை. அந்த வகையில்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல் ஆளுமையுடன் கட்சி நடத்தி வந்தவர் தான் மம்தா பானர்ஜி.மேற்கு வங்கம் என்றாலே அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என்று இருந்த காலத்தை மாற்றியவர் தான் இந்த மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி 2011 முதல் முறையாக மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி,

அதன் பிறகு 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து வென்று ஹாட்ரிக் முறையில் முதல்வர் அரியணையில் அமர்ந்தார்.இதனால், மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத தலைவராக மம்தா பானர்ஜி வலம் வந்தார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் அவரது கட்சி தோல்வியடைந்தது.

அவரது கட்சி மட்டுமில்லை மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார்.மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தற்போது சுவேந்து அதிகாரி தான் பாஜகவின் மேற்கு வங்க முதல்வராக உள்ளார்.இந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்குள் தான் மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடி விழுந்துள்ளது.

அதாவது தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி வசம் 20 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் முதல் முறை எம்எல்ஏவாகி உள்ள ரிதப்ரதா பானர்ஜி அணியில் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர்.அது மட்டுமின்றி ரிதப்ரதா பானர்ஜி தற்போது எதிர்க்கட்சி தலைவராக அம்மாநில சபாநாயகரான பாஜகவின் ரதீந்திர போஸ் அங்கீகரித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையால் ரிதப்ரதா பானர்ஜியை , மம்தா பானர்ஜி சஸ்பெண்ட் செய்தும் அவர் இந்த பொறுப்பை எட்டி பிடித்துள்ளார்.இவை அனைத்தும் கடந்த மாதம் தேர்தல் முடிவு வெளியான 4ம் தேதியில் இருந்து அடுத்த 4 வாரங்களுக்குள் அரங்கேறி உள்ளது. இந்தியாவின் முக்கிய அரசியல் ஆளுமையாக கருதப்பட்ட மம்தா பானர்ஜி தற்போது தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏனென்றால், அதிக எம்எல்ஏக்கள் தன்வசம் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் நாங்கள் தான் என்று ரிதப்ரதா பானர்ஜி உரிமை கோர முடியும்.
உதாரணமாக மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டேவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் பறித்தது போலவும் மேற்கு வங்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தை எடுத்து கொண்டால் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுடன் நீண்டகாலம் பயணித்தவர். பாஜகவுடன் நெருக்கமாக இருந்தவர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை விரும்பாதவர். அதோடு சிவசேனாவின் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தவர்.

உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே இருந்தார். அதேபோல் அஜித் பவாரை எடுத்து சரத்பவாரின் அண்ணன் மகன். இவரும் கட்சியின் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தவர். சரத்பவாருக்கு அடுத்த நிலையில் அஜித் பவார் இருந்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை நம்பி அந்த கட்சி எம்எல்ஏக்கள் சென்றனர்.

ஆனால் மேற்கு வங்கத்தில் அப்படியில்லை. ரிதப்ரதா பானர்ஜி இப்போது தான் முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். அதோடு அவரது அரசியல் பயணம் என்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தொடங்கவில்லை. அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். 2017 ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் கூட அவரது பெயர் கிடையாது.

இருப்பினும் அவர் 2024ல் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் உலுபேரியா பூர்பா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வெற்றி பெற்ற 4 வாரங்களில் கட்சியின் 60 சதவீத எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தி உள்ளது தான் இப்போது பேசும் பொருளாகி உள்ளது.
இது எப்படி நடந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கான விடை என்னவென்றால் மே 6ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மீட்டிங் நடந்தது. அப்போது கட்சி சார்பில் மம்தா பானர்ஜி சார்பில் எதிர்க்கட்சி தலைவராக ஷோபன்தேப் சட்டோபாத்யாயை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக எம்எல்ஏக்களிடம் ஆதரவு கடிதம் வாங்கப்பட்டது. அப்போது இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களான சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகியோர் விரும்பவில்லை. இதனால் அவர்கள் போலியாக கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து இருவரும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனால் கோபமான ரிதப்ரதா பானர்ஜி, மம்தா பானர்ஜிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.
இவர் உடனடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரினார். பலரும் ஆதரவு அளிக்க முன்வந்தனர். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிசேக் பானர்ஜியின (மம்தா பானர்ஜியின் அரசியல் வாரிசு) மீதான அதிருப்தியால் அவரது அணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அபிசேக் பானர்ஜியின் தலையீடு அதிகமாக இருந்ததால் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்கள் தற்போது தனி அணியாக திரண்டுள்ளனர்.
இதையடுத்து கட்சி 2 ஆக பிளந்தது. மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த 80 எம்எல்ஏக்கள் 2 பிரிவாக பிரிந்துள்ளனர். மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 21 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் தனி அணியாக 59 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிக்கு தலைமை வகித்து வருபவர் ரிதப்ரதா பானர்ஜி. இவர் தனக்கு ஆதரவாக உள்ள 58 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி மேற்கு வங்க மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை எட்டிப்பிடித்துள்ளார்.

அவருக்கு பாஜக சபாநாயகர் ரதீந்திர போஸ் அங்கீகரித்துள்ளார்.
இருப்பினும் அவர், ”நாங்கள் மம்தா பானர்ஜியின் தலைமைக்கு சவால் விடவில்லை. கட்சியைப் பிரிக்கவில்லை. திரிணாமூல் காங்கிரஸ் கொடியின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார். இருப்பினும் மம்தா பானர்ஜி இதனை ஏற்கமாட்டார். ஏதாவது செய்து எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தப் பார்ப்பார் மம்தா பானர்ஜி. இதனை ரிதப்ரதா பானர்ஜி விரும்பமாட்டார்.
இதனால் ரிதப்ரதா பானர்ஜி தரப்பு கட்சிக்கு உரிமை கோர கூட வாய்ப்புள்ளது.

ஏனென்றால் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் இல்லாமல் இருந்தால் தான் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும். அப்படிப்பார்த்தால் 54 எம்எல்ஏக்களை விட குறைவாக இருந்தால் மட்டுமே மம்தா பானர்ஜியிடம் ரிதப்ரதா பானர்ஜி அணியினர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் தற்போது அவர்கள் 60 எம்எல்ஏக்களாக இருக்கின்றனர். இதனால் தகுதி நீக்க நடவடிக்கையை மம்தா பானர்ஜி தரப்பால் கோர முடியாது .

இதனால் அதிகமாக எம்எல்ஏக்கள் உள்ளதை காரணம் காட்டி ரிதப்ரதா பானர்ஜி வசம் கூட கட்சி செல்லலாம். ஏனென்றால் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோர் முறையே சிவசேனா, தேசியவாதக காங்கிரஸ் கட்சிகளை ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரிடம் இப்படித்தான் இழந்தனர்.

இதனால் மேற்கு வங்க அரசியல் சட்டசபை தேர்தல் முடிந்தாலும் தற்போது பரபரப்பிற்கு பஞ்சமின்றி உள்ளது. இதில் மம்தா பானர்ஜி தரப்பு வெல்லுமா? இல்லாவிட்டால் ரிதப்ரதா பானர்ஜி தரப்பு வெல்லுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகி உள்ள ரிதப்ரதா பானர்ஜியால் தற்போது மம்தா பானர்ஜிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00