மௌனத்தின் நினைவு! நீ அருகில் இல்லை என்பது காலப்போக்கில் மாறிவிடும்!!
மழை நின்ற பிறகும்…
நாம் பேசிக்கொண்டிருந்த நாட்கள்
ஒரு சுகமான மழைக்காலம்…
நம் ஒவ்வொரு வார்த்தையும்
விழுந்து நனைத்த மழைத்துளி…
இதயம் நிரம்பி வழிந்தது அப்போது
இன்று அந்த மழை ஓய்ந்துவிட்டது…
ஆனாலும், அந்த ஈர மண் வாசனை மட்டும்
என் ஞாபகங்களை விட்டுப் போவதே இல்லை…
பேசாமல் போனபின்பு,
அலைபேசி சிணுங்கும் ஒவ்வொரு முறையும்
“நீயாக இருக்குமோ?” என இதயம் ஒரு கணம் நின்று துடிக்கிறது…
வானொலியில் ஒலிக்கும் பழைய பாடல்
“இதைத்தானே நீ எனக்காகப் பரிசளித்தாய்?”
என நெஞ்சுக்குள் ஆணியடிக்கிறது…
நாம் கடந்த சில தெருக்களில்
இன்னும் உன் நிழல் என்னோடு நடக்கிறது…
நாம் அமர்ந்த தேநீர் கடையில்
இன்னும் உன் சிரிப்பொலி கேட்கிறது…
பேசாமல் போனபின், இந்த நகரத்தின் இரைச்சல்கூட
என் காதுகளில் மௌனமாகவே ஒலிக்கிறது…
உதடுகள் உச்சரிக்க மறந்த உன் பெயர்,
இதயத்திற்குள் துளசி மாலையாய் மணக்கிறது…
என் தனிமையின் தெய்வத்திற்கு
நான் தினமும் சூட்டும் ஒரே மாலை அதுதான்…
நீ அருகில் இல்லை என்பது, காலப்போக்கில் பழகிவிடும்…
ஆனால் உன்னை நினைக்காமல் இருப்பது,
என் உயிர் இருக்கும்வரை பழகவே முடியாத ஒன்று…
நாம் பேசாமல் இருப்பது ஒரு விபத்து.
உன்னை நினைக்காமல் இருப்பதுதான் மரணம்…
உன் குரலற்ற என் பொழுதுகள் ஊமையாகின்றன.
உன் சிரிப்பற்ற என் காட்சிகள் நிறமிழக்கின்றன…
எல்லாம் இழந்தபின்னும்,
உன் நினைவை மட்டும் எரிபொருளாய் கொண்டு
இந்த இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது.
வலிகள் / வரிகள்
ராஜவர்மன்.