விதி வரைந்த வேஷம்
வாழ்க்கை கொடுத்தது வரமென்று இருந்தேன் – அது
விதி வரைந்திட்ட வலையென்று தெரிந்தேன்!
மலர்மாலை என்றே கரம் நீட்டினேன் – அது
கழுத்தைச் சுற்றிய நாகமென்றறியேன்.
⸻
அவள் மௌனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் கண்டேன் – ஆனால்
அவை எனக்கானவை அல்லவென்று நின்றேன்.
சிரிப்பென்னும் திரையிட்டு ரகசியம் காத்தாள் – அவள்
விழிகளோ வேறிடம் கதை பேசிப் பார்த்தாள்.
⸻

அவள் பக்கம் நியாயம் என்றே வாதாடி நின்றேன் – இறுதியில்
அவள் ஆடிய நாடகத்தில் நானே வில்லனைக் கண்டேன்.
உலகத்தை அவளுக்காகப் பகைத்துக் கொண்டேன் – அவள்
உலகத்தில் எனக்கோர் இடமில்லை என உணர்ந்து கொண்டேன்.
⸻
வாசல் பார்த்து வழி தேடி நின்றேன் – அன்பின்
வாசலுக்கு சட்டத்தின் முத்திரை கண்டேன்.
மஞ்சள் கயிறு மாயம் செய்தது போதும் – இனி
வெள்ளைக் காகிதம் ஆட்சி செய்யும் கோலம்!
⸻
அவள் தேவதை, அவள் காதலே காவியம் – அந்த
அத்தியாயத்தில் நானோ தேவையற்ற ஓவியம்.
நல்லவன் என்பது பெயரளவில் தானோ? – இங்கு
வேஷம் போடுபவர்க்கே உலகமது சொந்தம் ஆனதோ?
⸻

✨
கல்லையும் தெய்வமாய்க் காணும் உள்ளம் – அன்பைக்
கண்டு நம்பியதில் என்ன கள்ளம்?
நம்பிக்கை வைத்தது நான் செய்த குற்றம் – அதன்
தண்டனை ஆயுளுக்கும் தீராத நட்டம்.
⸻
அவள் செல்கின்ற பாதை வசந்தத்தில் மலரும் – நான்
நிற்கின்ற இடமோ நிழல் கூட மறுக்கும்.
உடலுக்குள் உயிர் உண்டு; உணர்வுகள் இல்லை – இது
வாழ்வென்னும் பெயரில் நான் காணும் கொள்ளை.
அழுதழ முடியுமோ? சிரித்திட வழியுண்டோ?
காலமே, சொல் இதற்கு முடிவும் உண்டோ?
வலிகள் / வரிகள்
ராஜவர்மன்