🌸 அப்பா!!!!
நான் பிறக்குமுன்னே…
உன் தோள்களில் சுமை அதிகம்.
மூன்று சகோதரிகளின் மணவாட்டம்,
ஒரு தம்பியின் கல்வி,
உன் தாய் தந்தையின் முதுமை…
அனைத்தையும் நீ தூக்கினாய்.
உன் வியர்வை…
அவர்களுக்குப் பண்டிகை ஆனது.
ஆனால் என் சின்ன வயது மட்டும்
உன் நிழலைத் தேடிக்கொண்டே வளர்ந்தது.
அம்மா…
ஒருபோதும் உன்னை குற்றம் சொல்லவில்லை.
விளக்கேற்றி வேண்டினாள்…
விரதமிருந்து உன் நலனை நினைத்தாள்.
பசியை மறைத்த சிரிப்போடு
என்னைத் தழுவினாள்.
என் கண்களில் கனவு பெரிதானபோது…
அவள் கண்களில் ஒளி குறைந்தது.
என் கையில் வலிமை சேர்ந்தபோது…
அவள் கையில் நடுக்கம் வந்தது.
அவள் கண்களை மூடிய நாளில்…
வாசல் கதவு காற்றால் தானாகத் திறந்தது.
ஆனால்… உன் பாதச்சுவடுகளின் சப்தம் கூட வரவில்லை…
அந்த மௌனம்…
இன்றும் என் இதயத்தில் ஈட்டி கொண்டு துளைக்கிறது, உள்ளத்தை கிழிக்கிறது.
ஆனால்…
அவள் விட்டுச் சென்ற பாசம்
இன்றும் என் சுவாசத்தில் உயிராக இருக்கிறது.
உன் மௌனத்தின் பின்னாலும் கூட
அவளின் பிரார்த்தனைத் தடம் தெரிகிறது.
⸻
✨
அப்பா…
நீ கடந்த காலத்தின் தியாகம்.
அம்மா அமைதியான தேவதை.
நானோ…
உங்கள் இருவரின் நிழலுக்கிடையில்
வலியோடு நிற்கும் ஒருவன்!???
வலிகள் / வரிகள்
ராஜவர்மன்