மதகுபட்டியில் மணல் கொள்ளை ! தவெக நிர்வாகிகளால் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் !!?
தவெக கட்சியின் அரசியல் செல்வாக்குடன் ஆட்டிப்படைக்கும் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் கிராவல் மண் கொள்ளையர்கள். எதிர்த்தால் கொலை மிரட்டல். கிராம மக்கள் கொந்தளிப்பு.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள ஆலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் 03/06/2026ஆம் தேதி இரவு நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிராம இளைஞர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி மூலம் மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதை நேரில் கண்ட இளைஞர்கள் உடனடியாக வாகனங்களை சிறை பிடித்தனர். இதை அறிந்த மணல் கடத்தல் கும்பல் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசிபி மற்றும் லாரியை மீட்டுச் செல்ல முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மதகுப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..

பின்னர் அங்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் முன்னிலையில் டிரைவர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இளங்கம்பன் ஆகிய மூவரையும் கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் சௌமியா நாராயணன் அளித்த புகாரின் பேரில் மதகுபட்டி காவல்துறையினர்ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து,இந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளங்கம்பன் பல ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், செங்கல் சூளைக்காக மண் எடுப்பதாகக் கூறி கிராவல் மண்ணை விற்பனை செய்து வந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இளங்கம்பனின் மகன் நாகராஜன் தமிழக வெற்றிக்கழகத்தின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினராகவும், மகள் ஜெயபாரதி வடக்கு ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளராகவும், மருமகன் செந்தில் ஆலவாக்கோட்டை ஊராட்சி செயலாளராகவும் இருப்பதால் இவர்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கிராம மக்களை மிரட்டி வருவதாகவும், மணல் கொள்ளையை எதிர்த்துப் பேசுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே ஈச்சோடிக் கண்மாய், சின்ன கரிசக்கண்மாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாவட்டத்தின் மண்வளத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.