காடை குலத்தவரின் குலதெய்வம், செல்லாண்டி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமம், புதுப்பையில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ முத்து கருப்பண்ண சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழ் திருநாட்டின் நெற்றித்திலகம் போல் விளங்கும் கொங்குநாடு உழைப்புக்கும், விருந்தோம்பலுக்கும், மரியாதை மிகுந்த பேச்சு மொழிக்கும் பெயர் பெற்ற பல தனித்துவமான நல் இயல்புகளை கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய கொங்கு மண்டலம் 24 உட்பிரிவுகளைக் கொண்டது. “கொங்கில் நாலாறு நாட்டுக்குள் மேலான நாடு” என இலக்கியங்கள் புகழ்வதும், “கொங்கில் உயர் பெற்றுவளர் தென்கரைநாடு” என அருணகிரிநாதரால் பாடப்பெற்றதும் தென்கரை நாடாகும்.
தென்கரை நாடு 12 ஊர்களில் நான்காவது கிராமமாக ஊர் தொகை பாடலில் இடம்பெற்று இருப்பது, இளம்பிள்ளை என்று புலவர்கள் போற்றும் முளையாம்பூண்டி காணியாகும்.
கொங்கு வேளாளர்கள் தங்கத்திற்கு நிகரான மனம் படைத்தவர்களாகவும், சிங்கத்திற்கு நிகரான வீரம் உடையவர்களாகவும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாகவும், சொன்ன சொல் தவறாத மாண்புடைவர்களாகவும் காணிப் பாடல்களிலும், செப்பேடுகளாலும் புகழப்படுவோர் காடை குலத்தவர்களே.
மூவேந்தர்கள் தங்கள் நாட்டின் எல்லையை பிரிப்பதற்காக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலில் கூடிய போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவருக்கும் அவர்களது பெரும்படைக்கும் அன்னமிட்டவர்கள் காடை குலத்தவர்கள். மூவேந்தர்களால் பட்டம் பெற்ற பெருமை உடையவர்களும் காடை குலத்தவர்கள் ஆவர்.
கொங்கில் பாதி என்று சொல்லப்படுவதும் காடை குலமே. மேலும் முளையாம்பூண்டி காடை குலத்தவர்களுக்கு மட்டுமே உரிமை உடையது என்பது தனிச்சிறப்பாகும்.
கலியுகாதி சகாப்தம் – 4517 கிபி – 1416 ஆம் வருடம் துன்முகி ஆண்டு தை மாதம் எழுதப்பட்ட ஓலை சுவடிகளில் முளையாம்பூண்டிகாணி காடை குல, வரலாறு பெரிதும் சொல்லப்பட்டு இருக்கிறது.
இப்படி அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முளையாம்பூண்டி கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு விநாயகர், காடை குலதெய்வம் அருள்மிகு இளம்பிள்ளை செல்லாண்டியம்மன், அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி, அருள்மிகு லிங்கேஸ்வர சுவாமி மற்றும் பரிவார ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நூதன ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பராபவ வருடம் சித்திரை மாதம் 21 ஆம் நாள் (04/05/2026) திங்கள்கிழமை திருதியை திதி, அனுஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில், ரிஷப லக்கனத்தில் காலை 06:15 மணிக்கு மேல் 07:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் ரத்னகிரி சித்தர் மௌனகுரு பெருந்தவத்திரு. பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில், கூத்தம்பூண்டி சிவாகம கலாமணி கே.எஸ்.ரவிச்சந்திர சிவம் சர்வ சாதக தலைமையில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த சிவாச்சாரியார் பெருமக்களைக் கொண்டு காரணாகம முறைப்படி மூன்று நவாக்னி,பத்து ஏகாக்னி, 37 யாக குண்டங்கள் அமைத்து மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வருகை தந்து கண்ணினால் நம் குல தெய்வங்கள் கும்பாபிஷேகம் பெருவிழா கண்டு, மண்ணில் பிறந்த பெரும்பயனை அடைந்து, வாழ்வில் 16 செல்வங்களும் பெற்று நோயற்ற வாழ்வும், குறையற்ற செல்வத்துடன் வாழ வருக வருக என காடைகுலத்தவர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்.
04/05/2026 திங்கள் கிழமை அதிகாலை 03:30 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வருண ஜெபம், புண்யாகம் ஆறாம் கால யாக பூஜை துவக்கம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, த்வார பூஜை, அக்னி காரியம், நாடி சந்தானம் உயிரூட்டுதல் ஸ்பருசாகுதி,திரவ்யாகுதி, பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் மஹாபூர்ணாகுதி தீப ஆராதனை நடைபெறும்.
04/05/2026 அதிகாலை 05:30 மணிக்கு யாத்ரா தானம், மந்திர சக்தி, கலசங்கள் புறப்பாடு நடைபெறும்.
04/05/2026 காலை 06:15 மணிக்கு மேல் 06:30 மணிக்குள் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ முத்து கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ லிங்கேஸ்வரர் விமானம் மற்றும் ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
04/05/2026 காலை 6:30 மணிக்கு மேல் 6:50 மணிக்குள் விநாயகர் மூலஸ்தானம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
04/05/2026 காலை 06:50 மணிக்கு மேல் 07:00 மணிக்குள் ஸ்ரீ லிங்கேஸ்வரர் மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
04/05/2026 காலை 07:00 மணிக்கு மேல் 07:10 மணிக்குள் ஸ்ரீ முத்துக்கருப்பண சாமி மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
07:10 மணிக்கு மேல் 07:20 மணிக்குள் கன்னிமார், பேச்சியம்மன், மகாமுனி, தீபகம்பம் மற்றும் பரிவாரங்கள் அனைத்தும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
07:20 மணிக்கு மேல் 07:30 மணிக்குள் அய்யனாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். உடன் தசதானம், தச தரிசனம், மகா தீப ஆராதனை, மஹா கும்பாபிஷேக யாக ரட்சை, விபூதி, தீர்த்த, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4:00 மணிக்கு ஸ்நபன கலச பூஜை, மூலஸ்தானத்தில் ஷோடச திரவிய மஹா அபிஷேகம், ஸநபன கலச தீர்த்த அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம், மஹா தீப ஆராதனை, விபூதி, பிரசாதம் வழங்குதல், காப்புநிறை முளைப்பாலிகை, கங்கை சேர்த்தல், சிவாச்சாரியார் மரியாதை, கர்த்தா மரியாதை, மங்களப் பிரசாதம் வழங்குதல்.
இரவு 7:00 மணிக்கு மங்கள ஆரத்தி கும்பாபிஷேக பெருந்திருவிழா நிறைவு.
சிறப்பு அழைப்பாளர் மற்றும் தலைமை.
இரத்தினகிரி சித்தர் ‘மௌனகுரு’ பெருந்தவத்திரு. பாலமுருகன் அடிமை சுவாமிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் அருளாசி வழங்க உள்ளார்கள்.
குறிப்பு.
27/04/2026 திங்கள் கிழமை முதல் 04/05/2026 திங்கட்கிழமை முடிய தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
இன்னிசை நிகழ்ச்சி.
03/05/2026 ஞாயிற்றுக்கிழமை இரவு விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 7 டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் மற்றும் கலைமாமணி கிராமிய பின்னணிப் பாடகி சின்னப்பொண்ணு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னர் அருணா, மதுரை புகழ் அசோக் மெலோடிஸ் இசை குழு, சேலம் லைட்டிங் ஆடியோ இணைந்து வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சித்திரை மாதம் 22 ஆம் நாள் (05/05/2026) செவ்வாய்க்கிழமை முதல் 48 தினங்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனி மாதம் 07ஆம நாள் (21/06/2026) ஞாயிற்றுக்கிழமை மண்டல அபிஷேகம் நிறைவு விழா. கட்டளை செய்ய விரும்புவோர் அலுவலகத்தில் பதிவு செய்யவும் தொடர்புக்கு:-
94877 17733.

பக்தர்களை வருக! வருக!! இறையருள் பெறுக!! என்று அனைவரையும் வரவேற்பது காடை குலச்செல்வன் ஆர்.சுரேஷ் குமார் உடுமலைப்பேட்டை