சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் : எஸ்பி சிலம்பரசன் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (12.01.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.
மேலும் மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை குற்றங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் தடுத்தும், கஞ்சா வழக்கில் எதிரிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போன்ற பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 40 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், அரசு வழக்குரைஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.