மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு.. அறிகுறிகள் என்ன? எங்கே இருக்கும்?
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகரிக்கிறது, ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதற்றம் தேவையில்லை என கூறி, அசுத்தமான நீரில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
கேரளாவில் கோழிக்கோடு, மூணாறு ஆகிய பகுதிகளில் தூய்மையற்ற நீர்நிலைகளில் குளித்தவர்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அசுத்தமான ஏரி, குளங்களில் குளிக்கும் போது, மூக்கின் வழியே மூளைக்குள் நுழையும் அமீபா, திசுக்களை அழித்தொழிக்கும். தலைவலி, காய்ச்சல், வாந்தியில் தொடங்கும் அறிகுறிகள் மயக்கம், கோமா நிலைக்கு அழைத்து செல்லும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களின் கவனத்தை இழப்பது ஆகியவை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அமீபா உடலுக்குள் நுழைந்த 18 நாட்களில் உயிர் இழப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பாதிப்பு மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் கண்டறிவதும், உரிய சிகிச்சை அளிப்பதும் கடினமானது எனக் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பதற்றம் அடையாமல், விழிப்புணர்வுடன் இருந்தால், மூளையை தின்னும் அமீபாவை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.