சிவகங்கை திருப்புவனம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் சிறு சிறு வேலைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக அந்த வேலைகளுக்கு சுலபமாக தீர்வு காணும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கின்றன.
சாதி சான்றிதழ், பட்ட மாறுதல், பென்சன், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை திருத்தங்கள், ரேசன் அட்டை முகவரி திருத்தம் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, இந்த முகாம்களின் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் 45 நாட்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் 50-க்கும் மேற்பட்டவை வைகை ஆற்றில் மிதப்பதாக உள்ளூர் மக்களுக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருப்புவனம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தார். அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
ஆனால் அதற்குள் இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகின. 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என மனுக்கள் கொடுத்த மக்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த குறிப்பிட்ட முகாமில் மக்கள் அளித்த புகார் மனுக்களை பெற்ற அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இது குறித்து விசாரணை நடத்த, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இது போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.