தாய்ப்பால் தானமாகக் கொடுத்த ஆசியாவின் முதல் பெண்மணி செல்வப் பிருந்தா, குவியும் பாராட்டுக்களும், பதக்கங்களும்.

by ஆசிரியர்
Reading Mode

தானங்களில் எத்தனையோ தானங்கள் இருந்தாலும் அதில் மிகவும் புனிதமான தானம் தாய்ப்பால் தானமே.திருச்சியை சேர்ந்த செல்வ பிருந்தா 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய ஆசியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தன்னைப் போன்று நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக வழங்கி அவர்களுக்கு உதவிட முன் வர வேண்டும் என்று செல்வ பிருந்தா கேட்டுக்கொண்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த காட்டூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வப் பிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிரனீத் என்ற ஆண் குழந்தையும், பிரணிக்கா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

பெண் குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் தேவையைக் காட்டிலும் கூடுதலாக தாய்ப்பால் சுரக்கத் தொடங்கியது. அப்போது, அரசு மருத்துவமனைகளில், குறை பிரசவத்தில் பிறந்த பல குழந்தைகள் பலவீனமாகவும், தாய்ப்பால் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்று வருவது செல்வப் பிருந்தாவுக்கு தெரிய வந்தது.

சிகிச்சையில் உள்ள அத்தகைய குழந்தைகளின் பசியைப் போக்கி, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியையும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும் வல்லமை தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை செல்வப் பிருந்தா புரிந்துகொண்டார். தான் பெற்ற குழந்தையின் உணவுத் தேவையை காட்டிலும் அதிகமாக சுரந்த தாய்ப்பாலினை, மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன், ‘அமிர்தம் தாய்ப்பால் தானம்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் துணையுடன் தானம் கொடுக்க தொடங்கினார்.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததன் மூலமாக, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தாய்ப் பாலுக்காக ஏங்கி தவித்த எண்ணற்ற குழந்தைகள் உயிர் பெற்றுள்ளனர். அதனை அங்கீகரித்து செல்வப் பிருந்தாவை பாராட்டி, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ நிறுவனமும், ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ நிறுவனமும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளன.

இது குறித்து பேசிய செல்வ பிருந்தா, “மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி, உடல் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை சான்று பெற்றுக் கொண்டு, வீட்டில் இருந்தபடியே தாய்ப்பால் சேமித்து வைக்க தொடங்கினேன். அதனை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பதற்கு தன்னார்வலர்கள் உதவினார்கள்.அரசு மருத்துவமனையின் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த மருத்துவர்கள் எனது தாய்ப்பாலை ஆய்வு செய்த பின்னர் அதனை சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற மகிழ்ச்சியில் எனக்கு குறைவில்லாமல் தாய்ப்பால் சுரந்தது. எனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் தாய்ப்பால் தானம் செய்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும், தன்னைப் போன்று நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தாய்ப்பாலை தானமாக வழங்கி அவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும் என்றும் செல்வப் பிருந்தா கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள். ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்று தாய்ப்பால் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை, தாய்மார்களிடம் அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உலக தாய்ப்பால் வாரம் விழா கொண்டாடும் இந்த தருணத்தில், செல்வ பிருந்தாவின் இத்தகைய செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது பெருமை என்பதுடன், இது மற்ற தாய்மார்களுக்கும் ஊக்கம் அளிப்பதாகவே உள்ளது. அரசும் இது போன்ற தாய்மார்களை அங்கீகரித்து தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க முன் வர வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. பல குழந்தைகள் நலமுடன் வாழ தாய்ப்பாலை தானமாக கொடுத்து உதவிய பாரதி கண்ட புதுமைப்பெண் செல்வப்பிருந்தா அவர்களை நாமும் மனதாரப் பாராட்டி அவர்களை போல் நாமும் தாய்ப்பால் கொடுத்து உதவிட முன் வர வேண்டும். அதுவே சிறந்த சேவையாகும்.

தாய்மையை போற்றுவோம்! தாய்ப்பால் தானமாக வழங்கிய செல்வப் பிருந்தாவை நாமும் பாராட்டுவோம்!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00