தூத்துக்குடியில் காவல் நிலைய எழுத்தர்கள் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்! மாவட்ட எஸ்பி. ஆல்பர்ட் ஜான் அதிரடி உத்தரவு!!
தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தர்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் நிலைய எழுத்தர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 55-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தின்போது அதிகாரிகள் கேட்கும் தகவல்களை சரியாக கொண்டு வந்து சமர்ப்பிக்கவேண்டும், ஆவணங்கள் குறித்து கேட்ட தகவல்கள் தெரிவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களில் பலர் காவல் துறை உயரதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், உரிய தகவலை தெரிவிக்காமலும் இருந்துள்ளனர். இதனால் அவர்களில் 13 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.