தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் – DGP நியமனம்? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !??
தமிழ்நாடு அரசு அளித்துள்ள அதிகாரிகளின் பட்டியலை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் – UPSC விரைவில் பரிசீலித்து மூன்று பேரைத் தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு !
மாநில காவல்துறை இயக்குநர் ஒருவரின் பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அடுத்தடுத்து தர வரிசையில் இருக்கும் காவல்துறை இயக்குநர் தகுதிக்கான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு இந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அந்தப் பட்டியலை மாநில அரசுக்கு பணியாளர் தேர்வாணையம் அனுப்பும்.
அதில் ஒருவரைக் காவல் துறை இயக்குநராக நியமிக்க வேண்டும்.
இதுதான் சட்ட விதிமுறை.
ஆனால், தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக இருந்த சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் முடியும் நாட்களில் தான் இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அதில் தற்பொழுது பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமன் அவர்களின் பெயரும் உள்ளது.
அதேவேளை, திரு வெங்கட்ராமன் அவர்கள் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி.
தமிழ்நாடு அரசு அளித்துள்ள தரவரிசைப் பட்டியலில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார், அபய் குமார், வன்னியப் பெருமாள் என 1990 ஆம் ஆண்டு, 92ஆம் ஆண்டு மற்றும் 93 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது, காவல்துறை இயக்குநர் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும், இது உச்சநீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறி வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு கீழ்கண்டவாறு கேள்விகளை எழுப்பிப் பிறகு உத்தரவிட்டது.
“தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டது ஏன் ? எனத் தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி, காவல்துறை டிஜிபி பதவிக்கு தன்னுடைய பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு காவல் அதிகாரி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் முன்பு வழக்குத் தொடுத்துள்ளார் அதனால்தான் வழக்கமான டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நிலையில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டார் எனத் தெரிவித்தார்
அப்போது தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே காவல்துறை டி.ஜி.பி நியமன விவகாரத்தில், தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பெயர்ப் பட்டியலை யுபிஎஸ்சி விரைவாகப் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.
யுபிஎஸ்சியிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு அரசு வழக்கமான டி.ஜி.பியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் நீதிபதி.
அப்போது மனுதாரர் ஹென்றி டிஃபேன் தரப்பில் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்குத் தலைமை நீதிபதி, டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு கால வரம்பை நிர்ணயம் செய்து உத்தரவிட முடியாது. ஆனால் டிஜிபி நியமனம் தொடர்பான பெயர்ப் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் யுபிஎஸ்சி மூன்று பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பும். அதிலிருந்து ஒருவரைத்தான் புதிய டிஜிபியாக நியமிக்க முடியும்.
1990 முதல் 93 வரை அதிகாரிகள் இருக்கும் போது 94 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமன் அவர்களை யுபிஎஸ்சி தேர்ந்தெடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
யுபிஎஸ்யின் இறுதிப்பட்டியில் வந்த பிறகுதான் யார் அந்த மூன்று அதிகாரிகள் என்பது தெரியவரும்.