திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் ஐடி ஊழியர் கவின் என்பவர் சென்ற வாரம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கொலை வழக்குக்கு சம்பந்தம் இல்லாத வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற வீடியோக்கள் மீண்டும் பகிரப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி காவல்துறை கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலை தளங்களில் ஒரு சில நபர்களால் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
மேற்படி வீடியோவில் உள்ள சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றது ஆகும். மேலும் அந்த வீடியோவுக்கும், திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இதுபோன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிரும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, திருநெல்வேலி காவல்துறை கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி அறிக்கை வெளியிட்டுள்ளார்.