ராமநாதபுரம் மாவட்டத்தில், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக, பேரம் பேசி 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவை சேர்ந்த மனுதாரர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) வாரிசு சான்றிதழ் வேண்டி கடந்த வாரம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தவசிக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பிரேமானந்தனை சந்தித்து கேட்டபோது ரூ.4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெறுவதில் உடன்பாடு இல்லாத மனுதாரர், இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரனிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.4 ஆயிரத்தை கொண்டு சென்றார். அதை, தான் வாங்காத விஏஓ, தனக்கு புரோக்கர் வேலை பார்க்கும் கமுதி எஸ்பி டிரேடர்ஸ் உரிமையாளர் வடிவேலு என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்.
அதை அவர் வாங்கிக்கொண்டபோது, அங்கு மாறு வேடங்களில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் புரோக்கரின் கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.இதையடுத்து விஏஓ பிரேமானந்தன்,(வயது 46), புரோக்கர் வடிவேலு,(வயது52), ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்டை பெற்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு தேவையான மாத ஊதியத்தை மாதம் தவறாமல் தமிழக அரசு கொடுத்த போதிலும், லஞ்ச லாவண்யத்தில் ஊறிப்போன வருவாய்த்துறை அதிகாரிகளின் கைகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த முடியவில்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற சொல்லுக்கு இணங்க, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அவர்களை தானே திருத்திக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இருந்த போதிலும், இப்படிப்பட்டவர்களின் ஊழலை தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தமிழக வருவாய்த்துறையால் அரசுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, வருவாய்த்துறையினருக்கு மித மிஞ்சிய வருவாயாக லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்பதே உண்மையாகும்.
வருவாய்த்துறை அலுவலரின் வாரிசுகளை வளர்க்க, அடுத்தவர்களின் வாரிசுகளிடம் வாங்கிய லஞ்சத்திற்காக தற்போது சிறை துறையில் தஞ்சமடைந்து உள்ளனரோ? இச்செயல் அற்புதமானதே!!!!