கடலோர காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் : 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை!
ஆத்தூர் அருகே உயிரிழந்த கடலோர காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே தலைப்பண்ணையூரை சேர்ந்தவர் மகாராஜன் என்ற பெருமாள் மகன் ராஜ். இவர் தூத்துக்குடி தெர்மல் நகர் மீனவர் காலனி கடலோர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஆத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ராஜ் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று அவரது உடல், துணைக் கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் மகேஸ்வரன், கடலோர காவல்படை ராஜன், ஆய்வாளர்கள் ஆறுமுகனேரி திலீபன், கடலோர காவல் படை பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலையில் காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, ஆத்தூரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.