மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிறங்கி, “நான்கொடுக்கிறேன் மாந்தாதா” என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார்.
மனித சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன்.
தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின்போது வாயில் விரல் இட்டுக்கொள்கிறது.
ஆனால்!!?
இங்கு ஸ்ரீகிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை!
அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை ‘அமிர்த வபு’ என்கிறது.இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில்போட்டு கொண்டிருக்கிறார்.
இடது கட்டை விரல்தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன்.
யோக சாதனை செய்வதன்மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும். அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் கால்கட்டை விரலை ருசிக்கிறார்.
வாடாத வதங்காத ஆத்மா ஆலிலை கண்ணன்.
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்..
பொன்,பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.
மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு.இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை, சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும்..
இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால்,அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது..
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான்.அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால்,உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய், குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.