கனவில் தோன்றும் ஜீவராசிகளைக் கண்டால் சஞ்சலம் தேவை இல்லை. அவை நம்மை விரட்டாமல் இருந்தால், அந்தக் கனவை நல்ல கனவாகவே எடுத்துக்கொள்ள லாம். அந்த ஜீவராசிகள் உணவுகேட்டு வந்தால், நிச்சயமாக அது நல்ல சகுனம்தான்!
அதே ஜீவராசிகள் ஆக்ரோஷமான முறையில் நம்மை விரட்டுவது போல அல்லது நம்மைப் பாதிப்பது போல் கனவுகள் வந்தால், நிச்சயம் ஏதோ ஒரு விரயம் வரப்போகிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
இதற்கான பரிகாரம்:-
தினமும் காகம், பசு அல்லது நாய்க்கு உணவிடுவது சிறப்பு.
பாம்புகள் கனவில் தோன்றி நம்மை விரட்டுவது போலவும் கடிப்பது போலவும் கனவு வந்தால் நிச்சயம் சனியினுடைய பாதிப்பு ஜாதகத்தில் உண்டு. அதுவும் அந்த நாகம் கறுத்த நிறம் கொண்டிருந்தால், நிச்சயம் சனிக்கான ப்ரீதி செய்வது மிக நல்லது. அதேபோல் காகம், கறுத்த உருவம், கறுத்த நிறப்பொருள், கறுத்த நிற உடை… இவை போன்ற விஷயங்கள் கனவில் வந்தால், அதுவும் சனியின் பாதிப்பே.
மாற்றுத்திறனாளிகள் கனவில் வந்து அழுவதுபோல் காட்சி வந்தால், சனி உங்களுக்கு யோகத்தை தரப்போகிறார் என்று அர்த்தம். அவர்கள் கனவில் தோன்றி விகாரமாக சிரித்தாலோ அல்லது மெதுவாகப் புன்னகைத்தாலோ நிச்சயம் மிகப்பெரிய விரயம் அல்லது மனக்கஷ்டம் ஏற்படலாம்.இங்ஙனம் சனிக்கிரகப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் கனவுகளைக் கண்டால்,
இதற்கான பரிகாரம்:-
சனிக்கிழமைகளில் சனீஸ்வரர் வழிபாடு செய்யவேண்டும். அன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வணங்குவது அவசியம். அதேபோல் காகத்துக்கு அன்னம் இடுவதும் சிறந்த பரிகாரமாகும்.
கனவில் முன்னோர்கள் வருவது அல்லது குலதெய்வம் தோன்றுவத ராகு – கேதுவின் அமைப்பைக் குறிக்கும். அவர்கள் மஞ்சள், பால், தேன், பட்டு, நெய், வெண்ணெய், இனிப்பு, பழங்கள், காய்கறிகள், அரிசி போன்ற பொருள்களைக் கேட்டால், அது நமக்கு வாழ்வில் ஏற்றத்தை தரக்கூடிய கனவாகும். அவர்கள் விகாரமாக சிரிப்பது அல்லது புன்னகை தருவது நல்லதல்ல.
அவர்கள் அழுதால், அந்தக் கனவு நமக்கு ஒரு சுப விரயத்தைக் குறிக்கும், எனவே, சில கனவின் அர்த்தங்களை எதிர்மறையாகப் பார்த்து பலன்களை அறிய வேண்டும்.