தமிழக அரசு வெறும் 58 பைசா வட்டியில் வழங்கும் கடன் உதவி.. விண்ணப்பிப்பது எப்படி?
கலெக்டர் பதில்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வீதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
கறவை மாட்டிற்கு ரூ.60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி திட்டங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுகளை சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வீதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி 7 சதவீதம். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
இணையதள முகவரியில் (http://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். (சாதிச் சான்றிதழ்). குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்ச கடன் வரம்பு ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை இந்த இணையதள முகவரியில் (https://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.