தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கி , சமூக ஆர்வலர்களை அச்சுறுத்துவதா !!?

by ஆசிரியர்
Reading Mode

தகவல்அறியும்உரிமைச் சட்டத்தை முடக்கி, சமூக ஆர்வலர்களை அச்சுறுத்துவதா?

மக்களாட்சியின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்குவது வெளிப்படைத்தன்மை ஆகும். ஊழலற்ற, நேர்மையான சமூகத்தையும் நிர்வாகத்தையும் உறுதி செய்ய இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கும் எளிய குடிமக்களுக்கும் கிடைத்த மிக வலிமைமிக்க ஆயுதம் “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” (RTI) ஆகும்.

சாமானிய மக்களின் கைகளில் இருக்கும் இந்த ஒரேயொரு அதிகாரத்தையும் பறிக்கும் வகையிலும், சமூக நலனுக்காகக் களமாடும் சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் வகையிலும் அரங்கேறும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் அண்மைக்காலமாக மிகக் கொடூரமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெற்ற சாலை கட்டுமானப் பணியில் நடந்த முறைகேடுகளைக் கண்காணித்து, தவறைத் தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் ராகேஷ்குமார்பெல் மற்றும் ஒருவரை பஞ்சாப் காவல்துறை வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது.

இவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு, “தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் என்பது இப்போது ஒரு புதிய தொழிலாகவே மாறிவிட்டது. மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது, அது சாலையை எப்படி அமைப்பது என்று பார்த்துக்கொள்ளும். இதில் தலையிட நீங்கள் யார்?” என்றும், “மத்திய அரசின் சாலை கட்டுமானப் பணிகளை நீங்கள் ஏன் கண்காணிக்கிறீர்கள்? அதைச் செய்வதற்கு நீங்கள் என்ன உயர் அதிகாரியா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒட்டுமொத்த ஜனநாயகக் கோட்பாடுகளையே உலுக்கியுள்ளது.

மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது, அதை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஜனநாயக நாட்டில் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அரசு வழங்கும் நிதி என்பது இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய உழைக்கும் மக்கள் தங்களின் வியர்வையைச் சிந்திச் செலுத்தும் வரிப்பணமே தவிர, அது ஆட்சியாளர்களின் சொந்தப் பணம் அல்ல! மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, அதில் முறைகேடுகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் முழு உரிமையும், தார்மீகக் கடமையும் இந்த நாட்டின் ஒவ்வொரு விழிப்புணர்வுள்ள குடிமகனுக்கும் உண்டு.

ஒரு மக்கள் நலத் திட்டத்தில் அல்லது பொதுப் பணியில் முறைகேடும் ஊழலும் நடப்பதாகத் தெரிந்தால், அதைத் தட்டிக்கேட்பதற்கு ஒருவன் ‘உயர் அதிகாரியாக’ இருக்க வேண்டிய அவசியம் ஜனநாயகத்தில் கிடையாது. விழிப்புணர்வுள்ள குடிமகனாக இருந்தாலே போதுமானது. சமூக ஆர்வலர்களை இத்தகையக் கேள்விகள் மூலம் அச்சுறுத்துவது, ஊழல்வாதிகளுக்கும் தவறு செய்பவர்களுக்கும் நீதிமன்றமே அரணாக மாறிவிட்டதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் விதைத்து விடும்.

எவ்வித சுயநலமும் இன்றி, சமூக நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று ஊழலுக்கு எதிராகப் போராடும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களை, “புதிய தொழில் செய்பவர்கள்” என ஒட்டு மொத்தமாகச் சித்தரித்துக் கொச்சைப்படுத்துவது மிகக் கொடூரமானது. இத்தகைய ஒற்றைத்தன்மை வாய்ந்த கருத்துகள், இந்தச் சட்டத்தின் வீரியத்தை அடியோடு நீர்த்துப் போகச் செய்துவிடும் ஆபத்து நிறைந்தது.

இத்தகைய கைது நடவடிக்கைகளும், நீதிமன்றத்தின் இத்தகையக் கருத்துகளும் எதிர்காலத்தில் சமூக அநீதிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நினைக்கும் சாமானிய மனிதர்களை ஒடுக்கி, முடக்கிவிடும் சதியாகும்.

அதிகார வர்க்கத்தின் இத்தகையப் பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மாண்பையும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையும் நீதிமன்றங்களும், அரசுகளும் நிலைநிறுத்த வேண்டும் என ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர், தலைவர் கு.ஜக்கையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00