ஆடி அமாவாசை ! மனிதப் பிறவியை நமக்குத் தந்த முன்னோருக்கு நன்றி கடன் செலுத்துவது நம் கடமை !!?
சூரிய பகவான் தெற்கு நோக்கி பயணத்தை துவங்கும் மாதமான ஆடியில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு மிக்கது.
இந்த நாளில் மறைந்த நமது முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது குடும்பத்திற்கு நன்மையை தரும்.
இது ஒரு நன்றிக் கடன் திருவிழா.
பெற்றோர் இல்லாமலோ தாத்தா பாட்டிகள் இல்லாமலோ நாம் இந்த பூமிக்கு வரவில்லை கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை நமக்குத் தந்தவர்கள் அவர்கள்தான் மனிதப் பிறவி கிடைத்தால் தான் இறைவனை அடைவது எளிது.
பூச்சியாகவோ புழுவாகவோ இருந்து குறைந்த காலத்தில் மறைந்து போவது ஒருவகை வாழ்க்கை . ஆனால் அவை மிகுந்த பாவம் செய்து பிறந்தவை என்பார்கள்.

பல்வேறு புண்ணியங்களை செய்தால் தான் மானிடப்பிறவி கிடைக்கும் அதனால்தான் அவ்வையார் “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்று பாடினார்.
அந்த மனிதப் பிறவியை நமக்குத் தந்த முன்னோருக்கு நன்றி கடன் செலுத்துவது ஒவ்வொருவரது கடமை. இதற்காக சில நியதிகளை வகுத்து வைத்துள்ளனர்.
அதில் மிகவும் எளிமையானது எது என்றும் பெரியவர்கள் சொல்லி உள்ளனர்.
தீர்த்தக்கரைகளுக்கு சென்று எள்ளும் நீரும் இறைத்தாலே போதும். நமது முன்னோர் திருப்தி அடைந்து விடுவார்களாம்.
அவரவர் வசதிக்கேற்ப பச்சரிசி மாவினால் செய்யப்படும் பிண்டம் கரைத்தும் வழிபாடு செய்யலாம்.
இத்துடன் தீர்த்த கரைகளை விட்டு விட வேண்டும். நாம் கொண்டு செல்லும் பாலித்தீன் பைகளை தண்ணீரில் போடுவது, உடைகளை களைந்து ஆற்றில் போடுவது ஆகிய பாவச் செயல்களை செய்யக்கூடாது.
அவ்வாறு செய்தால் நம் முன்னோர் பயன்படுத்திய நீர் நிலைகளை அவமானப்படுத்தியதற்கு சமமாகும்.
மதிய வேளையில் வீட்டில் உணவு சமைத்து முன்னோருக்கு படைத்து வழிபட்ட பிறகு குடும்பத்தில் அனைவரும் இணைந்து சாப்பிட வேண்டும்.
முடிந்தவர்கள் தான தர்மம் செய்யலாம்.
குலதெய்வக் கோயில்களுக்கும் சென்று வரலாம்.ஏனெனில் அவை நமது முன்னோர் அடையாளம் காட்டியவை.
ஆடி அமாவாசை என்பது நமது முன்னோரை மகிழ்விக்கும் நிகழ்வு மட்டுமே. ஆற்றங்கரைகளை அசுத்தப்படுத்துவது அல்ல என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஆடி அமாவாசை தர்ப்பணத்தை நலமாக செய்து வாருங்கள்.
குறிப்பு:-
நீர் நிலைகளில் உங்கள் ஆடைகளை விடுவதோ, நெகிழி பொருட்களை விட்டுச் செல்வதோ, தண்ணீரில் அசுத்தம் செய்பவர்களுக்கு நிச்சயம் புனர்பூ தோஷம் ஏற்படும் என்பது திண்ணம்.