🌸 கவலை – பாட்டியின் கதை
ராஜவர்மன் ஒரு இன்ஜினியர்.
அலுவலகத்தில் வேலைப்பளு, டார்கெட்டுகள், மீட்டிங்ஸ்…, கடன், குடும்பச் சுமைகள் என்று ஓடிக் கொண்டே இருந்தான்.ஆனால் அவன் முகத்தில் எப்போதும் சிரிப்பு இல்லாமல், சோர்வு மட்டும் தெரிந்தது.ஒரு நாள் மாலை, வேலை முடிந்து அருகிலிருந்த கோவிலுக்குப் போனான்.அவனது முகத்தைப் பார்த்தாலே சுமையை உணர முடியும்.
கோவில் வாசலில் ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள்.வெள்ளை கூந்தல், சீரான புடவை, அமைதி நிறைந்த முகம்.அவள் ராஜவர்மனைப் பார்த்து கேட்டாள்:“என்ன தம்பி… முகம் சுருங்கிப் போச்சே? என்னாச்சு?”
ராஜவர்மன் சற்று நிம்மதியாகச் சுவாசித்து அவள் அருகே உட்கார்ந்தான்.“என்னமோ பாட்டி…
எல்லோரும் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை விடவில்லை.மேலும், நான் நினைப்பது போலவே யாரும் நடக்கலையே என்பதால் இன்னொரு கவலை.
இதுதான் என் வாழ்க்கை.”
பாட்டி சிரித்தாள்.
அந்த சிரிப்பு, “நான் உன்னைப் புரிந்துகொண்டேன்” என்று சொல்வது போல இருந்தது.
அவள் மெதுவாக சொன்னாள்:
“தம்பி… இந்த உலகத்தில் எல்லாருக்கும் இரண்டு கவலைகள் தான் அதிகம்.
முதல் கவலை – ‘அடுத்தவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்?’ என்பதுதான்.
அந்த எண்ணம் நம்மை எப்போதும் கட்டி வைக்கிறது.
இரண்டாவது கவலை – ‘நான் நினைப்பது போலவே அடுத்தவன் இருக்கணும்’ என்பதுதான்.
அது ஒருபோதும் நடக்காது.
நீ எவ்வளவு எதிர்பார்த்தாலும், அவன் அவன் மாதிரிதான் இருப்பான்.
இந்த இரண்டு கவலைகளையும் நீ தூர எறிந்து விட்டால்,
வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும்.”
ராஜவர்மன் அவளைப் பார்த்தான்.
அவனுடைய கண்களில் ஒளி மின்னியது.
“ஆனா பாட்டி… நான் என்ன பண்ணுறது?” என்று கேட்டான்.
அவள் சற்றே நெருங்கி, மெதுவாகச் சொன்னாள்:
“தம்பி… உலகம் உன்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
உன் சிரிப்போ, உன் கண்ணீரோ, அது உனக்கே உரியது.
ஆகையால், நீயும் உலகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
உன்னைப் பற்றியும் கவலைப்படாதே.
கவலைகள் குறையும் போது தான் மனசுக்குள் இடம் கிடைக்கும்.
அந்த இடத்தில்தான் சந்தோஷம் வந்து குடியிருக்கும்.
அந்தக் கவலைகளில் இருந்து வெளியே வந்துவிட்டால்,
உனக்கு சுமை குறையும்…
சிறகடித்து பறக்கத் தோன்றும்.”
⸻
அந்த வார்த்தைகள் ராஜவர்மனின் மனதைப் ஊடுருவி ச் சென்றன.
வீடு திரும்பும் வழியில், அவனது முகத்தில் மலர்ச்சியோடு கூடிய சிரிப்பு தெரிந்தது.
அந்த பாட்டியின் சிரிப்பே, அவனது மனதில் நிலைத்துப் போய்விட்டது.
⸻
✨ வாழ்க்கை எளிது…
கவலை தான் அதை சிக்கலாக்குகிறது.
வலிகள்/ வரிகள்
ராஜவர்மன்