விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் எப்படி செய்வது !?
முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகர், எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் வழிபடப்படும் தெய்வமாக விளங்குகிறார். தடைகளை நீக்கி, அறிவு, ஞானம், செல்வம், வெற்றி, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை அருள்பவர் என்பதால் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பான திருநாளாகக் கருதப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை மனதார வழிபடுபவர்களுக்கு வினைகள் தீர்ந்து இனிமையான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
இந்து சமயத்தில் முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த திருநாள், விநாயகர் சதுர்த்தியாகும்.விநாயகர் ‘விக்னஹர்த்தா’ அதாவது தடைகளை அகற்றுபவர் என அழைக்கப்படுகிறார். எனவே நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும் தடைகளும் விலகி நல்வாழ்வு பெற அவரை இந்நாளில் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளையே ‘விநாயகர் சதுர்த்தி’ திருவிழாவாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 14-ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: செப்டம்பர் 14-ம்தேதி, காலை 07.06 மணி
சதுர்த்தி திதி முடியும் நேரம்: செப்டம்பர் 15-ம்தேதி, காலை 07.44 மணி சிறப்பு பூஜை நேரம் (மத்தியான காலம்): செப்டம்பர் 14-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை (இது விநாயகர் பூஜை செய்ய உகந்த மத்திம நேரமாகும்) விநாயகரை வழிபட மிகவும் உகந்தநேரமாகும்.
வீட்டில் விநாயகர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு உங்கள் குடும்ப வழக்கப்படி 1.5, 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பாகக் கரைக்க வேண்டும்.விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலேயே எளிமையாகவும் பக்தியுடனும் வழிபாடு செய்வதற்கான முறைகளைப் பார்க்கலாம்.
1.வீட்டைத் தூய்மைப்படுத்துதல்.
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளே வீட்டைச் சுத்தம் செய்து, பூஜை அறையையும் தூய்மைப்படுத்த வேண்டும்.சதுர்த்தி அன்று காலையில் எழுந்து குளித்து, வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம்.வாசலில் அழகான கோலம் போடுவது சிறப்பு.பூஜை செய்யும் இடத்தில் ஒரு சிறிய மண்டபம் அல்லது பலகை அமைத்து அதன் மீது மஞ்சள் அல்லது சுத்தமான துணியை விரிக்கலாம்.
2.விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தல்
முடிந்தால் மண் விநாயகர் சிலையை பயன்படுத்துவது சிறந்தது சிலையை பூஜை மேடையில் வைத்து விநாயகருக்கு அருகில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள், அருகம்புல், வெற்றிலை,பாக்கு, பழங்கள், தேங்காய், விளக்கு, ஊதுபத்தி, நைவேத்தியம் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளலாம்.
3.அருகம்புல் சமர்ப்பித்தல்
விநாயகருக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படுவது அருகம்புல்.பொதுவாக அருகம்புல்லைச் சிறு கொத்துகளாக வைத்து விநாயகருக்கு அர்ப்பணிக்கலாம்.ஓம் கம் கணபதயே நமஹ” என்று கூறியபடி அருகம்புல் சமர்ப்பிப்பது சிறப்பு.
4.சங்கல்பம் செய்தல்.
பூஜையைத் தொடங்குவதற்கு முன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தங்களுடைய வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு சங்கல்பம் செய்யலாம்.விநாயகப் பெருமானின் அருளால் எங்கள் குடும்பத்தில் உள்ள தடைகள் நீங்கி, நல்ல ஆரோக்கியம், மனநிம்மதி, செல்வ வளம், கல்வி ஞானம், தொழில் முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை மற்றும் அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம.
5.விளக்கு ஏற்றுதல்.
குத்துவிளக்கு அல்லது அகல் விளக்கை ஏற்றி, முதலில் விநாயகரை மனதில் தியானிக்க வேண்டும்.விநாயகப் பெருமானே, எங்கள் பூஜையை ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கலாம்.
6.விநாயகருக்கு அபிஷேகம்.
வீட்டில் உள்ள சிலையின் தன்மைக்கு ஏற்றவாறு எளிய அபிஷேகம் செய்யலாம் பொதுவாக தூய நீர், பால், தயிர், தேன், சந்தனம் கலந்த நீர், இளநீர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் சிறிது நீரைத் தெளித்து மானசீகமாக அபிஷேகம் செய்வதாக நினைத்து வழிபட்டாலும் போதுமானது பக்தியே முக்கியம்; ஆடம்பரம் அவசியமில்லை.
7.அலங்காரம் செய்தல்
அபிஷேகத்திற்குப் பிறகு விநாயகரை சுத்தமான துணியால் அலங்கரித்து, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரிக்கலாம். செவ்வந்தி, அரளி, மல்லிகை உள்ளிட்ட பூக்களைப் பயன்படுத்தலாம். முக்கியமாக அருகம்புல் மாலை சாத்துவது சிறப்பாகக் கருதப்படுகிறது.