180 டன் எடையுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் ஆலயம் ! நடிகர் அர்ஜுன் அமைத்துள்ளார் !!?ஆஞ்சநேயர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட நடிகர் அர்ஜுன், தனது நீண்ட நாள் ஆசையை நனவாக்கியுள்ளார். சென்னை போரூர் அருகே கிருகம்பாக்கத்தில் ‘அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்’ என்ற பிரம்மாண்டமான கோவிலை அவர் அமைத்துள்ளார்.
இந்த ஆலயத்தை உருவாக்க வேண்டும் என்பது அர்ஜுனின் 17 ஆண்டுகால கனவு. அந்தக் கனவு நிறைவேற எடுத்துக்கொண்ட காலத்தைவிட, அந்தப் பயணத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களே மிகவும் மதிப்புமிக்கவை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் தனது தாய், மனைவி, மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அளித்த ஆதரவை அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அதேபோல், பலரின் உதவியும் ஊக்கமும் இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
ராமர், விநாயகர், நாகராஜர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் இங்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கோவில் உருவானதற்கு தனது முயற்சி மட்டுமே காரணம் என்று அர்ஜுன் கருதவில்லை. தன்னை அறியாமலேயே ஒரு தெய்வீக சக்தி இந்தப் பணியை செய்யத் தூண்டியதாக அவர் நம்புகிறார்.
கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, 180 டன் எடையுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை. சாந்தமாக அமர்ந்த நிலையில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட சிலை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக பெஜாவர் ஸ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் அயோத்தியிலிருந்து புனித மண்ணை கொண்டு வந்தார். அந்த மண்ணின் மீது ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.