வளர்பிறை சதுர்த்தி சூரிய உதய நேரத்தில் இருக்கும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி அதாவது புதன்கிழமை ஆவணி 11ஆம் நாள் அதாவது (27-08-2025) விநாயகர் சதுர்த்தி பெருவிழா. சதுர்த்தி வழிபாட்டில் களி மண்ணால் செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்குவது துவங்கி, மீண்டும் அந்த சிலையை எடுத்துச் சென்று கரைப்பது வரை அனைத்துமே மிகவும் முக்கியமானதாகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதற்கு மட்டுமின்றி, விநாயகர் சிலை வாங்குவதும் நல்ல நேரத்திலேயே வாங்க வேண்டும்.
மிக எளிமையாக வழிபட்டாலும் அவர்களுக்கு உடனடியாக வந்து அருள் செய்யக் கூடிய கடவுள் விநாயகப் பெருமான். அவரை வழிபடுவதற்கு ஏற்ற திதியாக சதுர்த்தி திதி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டு அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது மகா சதுர்த்தி எனப்படும் விநாயகர் சதுர்த்தி தான். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது.
வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் ஆகஸ்ட் 27ம் தேதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு எந்த நாளில், எந்த நேரத்தில் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். எந்த நேரத்தில் வழிபட வேண்டும், எப்போது விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று விநாயகர் சிலையை வாங்குவது சிறப்பு.ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்குபவர்கள் மாலை 04.50 முதல் 05.50 வரை அல்லது மாலை 06.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம்.ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதியன்று காலை 6:00 மணி முதல் 07.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம்.
புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்று காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை எமகண்டம் இருப்பதால் அந்த நேரத்தை தவிர்த்து இதற்கு முந்தைய நேரம் அல்லது 09:00 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்குவதற்கான நல்ல நேரமாக கருதப்படுகிறது
ஒருவேளை ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்க முடியவில்லை. ஆகஸ்ட் 27ம் தேதியன்று தான் விநாயகர் சிலையை வாங்க போகிறோம் என்பவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி காலை 06:00 மணி முதல் 07:20 வரை 09.10 மணி முதல் 10.20 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அந்த நேரத்திற்குள் வழிபடலாம்.
விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார்சாதம், பாயசம், அப்பம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 1.35 முதல் 2:00 மணி வரையிலான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம்.விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மாலையிலேயே செய்யும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் வழிபடலாம்.
பொதுவாக விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாம் நாளான ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கலாம். ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாவது நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று கரைக்க முடியாது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கக் கூடாது. அதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.
வீட்டில் விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் தினமும் விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது ஒரு சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். வீட்டிற்கு அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலை அமைத்துள்ளார்கள் என்றால் அந்த சிலைகளுடன் நம்முடைய வீட்டில் இருக்கும் சிலையையும் கொண்டு போய் கரைப்பதற்காக வைத்து விடலாம். அப்படி எதுவும் இல்லை என்பவர்கள் நீங்களே வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம்.
அப்படி நீர் நிலைகள் எதுவும் அருகில் இல்லாதவர்கள், வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து, அதற்கு விநாயகர் சிலையை வைத்து கரைத்து, பிறகு அந்த தண்ணீரை எடுத்துச் சென்று கால் படாத இடத்திலோ அல்லது பூத்தொட்டியிலோ ஊற்றி விடலாம்.