திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்பது ஏன்?
வேதகாலத்தில் “கூச்மாண்டன்” என்பவன் அரக்கர் குலத்தில் பிறந்தான். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்து அவர்களை துன்பப்படுத்திக்கொண்டு இருந்தான்.
அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி நாராயணனைச் சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்று புண்ணியதேவனே தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது தாங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே மீண்டும் வெல்லும். என்ற பழமொழிக்கு ஏற்ப அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த நாராயணன், உடனே அரக்கனின் இருப்பிடம் நோக்கி சென்றார்.
தன் பலத்தின் முன் யாரும் நிற்கமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன்.
வந்திருப்பது நாராயணன் என்பதையும் மறந்து சண்டைக்கும் தயாரானான்.
அதுசரி அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே! கடைசியில் யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான் கூச்மாண்டன்.
கூச்மாண்டா நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய், இது உன்பாவத்தின் சம்பளம் என்றார் நாராயணன்.
வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே, இனி நான் பிழைக்க போவதில்லை! எனது கடைசி ஆசையை நீங்கள்தான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று மரண வாயிலில் நின்று மன்றாடினான் கூச்மாண்டன்.
சரி கேள் என்ன வரம் வேண்டும் என்றான் ஸ்ரீமன் நாராயணன்.
நான் மறைந்தாலும் என் புகழ் அழியாத வரம் வேண்டும் என்றான் கூச்மாண்டன்.
இதுவரை உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது? என்றார் நாராயணன்.
பெருமானே!! நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை உங்கள் கையால் மரணம் எய்துவதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும்.அதற்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் என்று உள்ளம் உருகி வேண்டினான் கூச்மாண்டன்.
நாராயணன் மனம் இறங்கி சரி,, நீ இனி பூசணிக்காயாக பிறவி எடுப்பாய் உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும், கண் திருஷ்டி, பில்லி, சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ அதை தந்தவருக்கு சகல நன்மைகளும் கிட்டும்.
அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும் என்று கூச்மாண்டனுக்கு வரம் வழங்கினார்.அதனால் தான் இன்றும் கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.
கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறை இதனால் தான் வந்தது.. பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும் என்ற ஐதீகம் இப்படிதான் பிறந்தது.
நாமும் பூசணிக்காய் உடைத்து, நமக்குள்ள திருஷ்டிகளை போக்கி வளமோடு வாழ்வோமாக!