சூரிய கிரகணம்- நிகழும் நேரம்- இந்தியாவில் தெரியுமா??
21/09/2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 10:59 மணிக்கு உத்திரம் நட்சத்திரத்தில் கேது கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது.
அமாவாசை நாளில் சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 21ஆம் தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்திரம் நட்சத்திரத்தில் கேது கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது.
கிரகணம் எங்கெங்கு தெரியும்?
அமெரிக்கா
கனடா
அட்லாண்டிக் பெருங்கடல்
கிரகணம் நிகழும் நேரம்:
இந்திய நேரப்படி 21.09.2025 இரவு 10.59 முதல் 22.09.2025 அதிகாலை 03.29 வரை நடைபெறும்.
சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
சூரிய கிரகணம் இரவில் ஏற்படுவதால் இந்தியாவில் தெரியாது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.
யாருக்கு தோஷம்?
கிரகணமானது எந்த ஊரில் தெரிகிறதோ அந்த ஊருக்கு கிரகண தோஷம் உண்டு. அந்த ஊரில் வசிக்கும் நட்சத்திரக்காரர்களுக்கும், ராசிக்காரர்களுக்கும் கிரகண தோஷம் உண்டாகும்.
சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தைப் பொருத்து அந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தோடு, அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்கள், கிரகணம் நிகழும் நட்சத்திரத்திற்கான அதிபதி ஆளக்கூடிய நட்சத்திரங்கள் சற்று கவனமாக இருப்பதும், பரிகாரம் செய்வதும் நல்லது. அவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சூரிய கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.
உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
அசைவம் சாப்பிடக்கூடாது.
கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும்.
ஒரு பெண் இந்த சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். இதனை ஆராய்ந்துதான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவைதான்.
கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் வெட்டக்கூடாது.
கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு :
கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது.
கிரகணத்தின்போது உறங்கக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர் வீச்சுக்கள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது. கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்குச் சென்று விட்டு பிறகு, உணவு சாப்பிடலாம்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இங்குள்ளவர்களுக்கு தோஷம் இல்லை. எனவே பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.