மஹாலய பக்ஷம்,
மஹாலயம் என்பதன் விளக்கம் :-
( 08-09-2025 முதல் 21-09-2025 ) மஹாலய பட்சமாகும்
ஆலயம் என்றால் கூடுதல் என்று பொருள்,ஆன்மா லயித்தல் என்றும் பொருளுண்டு.மஹாலயம் என்கிற போது பல மஹா ஆத்மாக்கள் சேரும் இடம் அல்லது நமது முன்னோர்கள் சேரும் இடம், பலவித (பிரம்ம லோகம்,வைகுண்டம், கைலாய லோகம்,எம லோகம்,சூர்ய லோகம்,போன்ற…) உலகங்களில் வசிக்கும் மறைந்த நம்
முன்னோர்கள் கூட்டமாக சேரும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.
ஏன் மஹாளய பக்ஷம் ?
நாம் வசிக்கும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டி வீட்டில் இருப்போரை சிறிது நேரம் வெளியே இருக்கும் படி சொல்கிறோம் அல்லவா ?,அது போல யம தர்ம ராஜாவும் அவரது எம லோகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டி சிறிது காலம் அங்கு வந்துள்ள பித்ருக்களை (நம் முன்னோரை) வெளியில் அதாவது பூலோகத்தில் இருக்கும் படி பணிக்கிறார்.எனவே முன்னனோர்களும் அவர்களின் பிள்ளைகளை கண்டு ஆசி வழங்க மகிழ்ச்சியோடு நம் வீட்டிற்கு வருவார்கள். இதுவே மஹாளய பக்ஷம் என்கிறது சாஸ்திரம்.

மஹாளய பக்ஷம் எப்போது ?
வானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலையை அடிப்படையாக கொண்டு காலம் கணக்கிடப்படுக்கிறது. இதற்கு ஜோதிட சாஸ்திரத்தின் பயன்பாடு உள்ளது.பொதுவாக நமது இந்து மத பண்டிகைகள் எல்லாவற்றிலும் காலம் குறிக்க ஜோதிட ரீதியாக நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
புரட்டாசி மாதம் என்னும் கன்னி ராசியில் சூரியன் உள்ளபோது உண்டாகும் (சூர்ய சந்திர சேர்க்கை) அமாவாசை ஆகும். இந்த அமாவாசைக்கு மஹாளய அமாவசை என்கிறோம்.இதில் பக்ஷம் என்றால் 15 நாட்களை கொண்ட ஒரு பிறை ஆகும்.
எனவே ஆவணி மாதம் பௌர்ணமி முடிந்த பின்னர் வரும் 15 நாட்களும் கிருஷ்ண பக்ஷம் அல்லது தேய்பிறை காலம் 15 (சில நேரம் 14 அல்லது 16) நாட்களும் மஹாளய பக்ஷம் காலம் என்கிறோம்.
ஆனால் தர்ப்பண சங்கல்ப மந்திரத்தில் ஆஷாட்யா பஞ்சம அபர பக்ஷே , என்று சொல்லுவோம்.ஏன் என பார்த்தோமேயானால் ஆஷாட மாதம் அபர பக்ஷம் முதல் 4 பக்ஷம் முடிந்து 5 வது வரும் பாத்ரபத மாத கிருஷ்ண பக்ஷம் மஹாளயப க்ஷம் எனப்படும்.
மஹாளய பக்ஷத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
இந்த மஹளய பக்ஷம் முழுவதும் அதிக புண்ணியம் கிடைக்கும் காலம்.எனவே புண்ணிய செயல்களான புண்ணிய நதி ஸ்னானம்,பித்ரு தர்ப்பணம், தானம் ஆகியன செய்வது மிக சிறந்த பலனை தரும்.இந்த காலத்தில் நாம் வசிக்கும் வீட்டை நோக்கி நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் என்கிற தாய் தந்தை பாட்டன் பாட்டி உட்பட பலரும் பூலோகம் வருகின்றனர்.
எனவே அவர்கள் நினைவாக தான தர்மம், தர்ப்பணம்,சிரார்த்தம், வயதான பெரியோர்களை பெற்றோராக பாவித்து அன்னதானம் போன்றவை செய்வதால் அதிக புண்ணியம் கிடைக்கும்.
சிரார்த்தம், திலஹோமம் செய்து முன்னோரை வழிபட அவர்களது ஆசியால் வீட்டில் உள்ள குழப்பங்கள் தீரும், நன்மை உண்டாகும், நல்ல உடல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி உண்டாகும், பெரியோர் ஆசியால் கஷ்டங்கள் நீங்கும்.எனவே தான் இந்த மஹாளய பக்ஷம் காலத்தில் முன்னோர் நினைவாக நீத்தார் கடன்,பித்ருக்களுக்கு அன்னம் அளிக்க வேண்டுமே தவிர வேற எந்த ஒரு விசேஷமும் செய்ய கூடாது.அதாவது கல்யாணம்,கிரகபிரவேசம்,கும்பாபிஷேகம் போன்ற சுப காரியங்கள் தவிர்க்க வேண்டும்.

மஹாளயத்தை எப்படி செய்ய வேண்டும்?
3 வகையில் செய்யலாம்.
1.பார்வணம் என்ற முறையில் 6 பிராமணரை பித்ருகளாக பாவித்து பெரியவர்களுக்கு ஹோமம் செய்து சாப்பாடு போடுவது.
2 வது முறையில் ஹிரண்யம் என்கிற பெயரில் அரிசி, வாழைக்காய்,பாத ரக்ஷை, குடை, வஸ்திரம்,ஆஸனம் போன்றவை தானமாக ஏழைகளுக்கு அல்லது வேதம் ஓதும் பிராமணர்க்கு கொடுத்து அல்லது வேத பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு கொடுத்து தர்பணம் செய்ய வேண்டும்.
3 வது வகையில் திலஹோமம் போன்றவை செய்து அமாவாசை தர்ப்பணம் போல் செய்ய வேண்டியது.
இவற்றில் ஏதாவது ஒரு வகையில் தனது முன்னோர்களுக்கு மஹாலயத்தை செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டும்.
எப்போது மஹாலயம் செய்ய வேண்டும்?
மஹாளய பக்ஷம் காலம் 15 அல்லது 16 நாட்களும் செய்வது நல்லது.உத்தமம்.
மஹாளய பட்ச 15 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் மற்றும் அமாவாசை அன்றும் ஆக 2 நாள் முன்னோர் வழிபாடு அவசியம் செய்து கொள்ள வேண்டும். முடியாவிட்டால்,மஹாளய பக்ஷ காலத்தில் ஒரு குறிப்பிட்ட சில நாட்களை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
பஞ்சமி(11-09-2025),
மத்யாஷ்டமி(14-9-2025),
மஹா பரணி(11-9-2025),
மஹா வியதீபாதம்(15-9-2025)
சுமங்கலியாக இறந்தவர்களுக்கு – கஜச்சாயை(19-9-2025),
சன்யாசிகளுக்கு-ஸன்யாஸ்தமாலயம் (18-9-2025),
விபத்தில் இறந்தவர்களுக்கு- அஸ்திரஹதமாலயம் (20-9-2025),
கணவருக்குக்காக மனைவி செய்ய அவிதவா நவமி(15-9-2025),
அனைவருக்கும்
மஹாளய பக்ஷ அமாவாசை (21-9-2025) போன்ற நாட்களில் செய்யலாம்.

மஹாளயம் செய்வதால் வரும் நன்மைகள்:-
இப்போது எல்லாம் எதை செய்தாலும் அதனால் வரும் நன்மை என்ன என்கிற மனநிலை பலருக்கும் உள்ளது.ஆனால் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய செயல்களுக்கே பலன் மிக அதிகம். நீங்கள் என்ன தெய்வ பூஜைகள் செய்தாலும் உங்களை பெற்று வளர்த்து உங்களுக்கான சொத்துக்களை, புண்ணியங்களை சேர்த்து வைத்த உங்கள் முன்னோரை மறந்து விடக்கூடாது. அவ்வாறு செய்தால் எந்த தெய்வ வழிபாடும் நன்மை தராது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை அனுபவிக்கும் நீங்கள் நாம் அவர்கள் செய்த பாப புண்ணியத்தையும் அனுபவிக்க கடமைப்பட்டவர்கள்.
பொதுவாக மஹாளய பக்ஷ காலத்தில் நமது முன்னோர் நினைவாக சிரார்த்தம் தர்பணம் செய்வதால் பித்ருக்கள் ஆசிர்வாதம் கிட்டும். அதனால் குழந்தை செல்வம், ஆரோக்கியம், விரும்பிய பலன்களை கொடுக்கும்.முன்னோர்களை நாம் வழிபடுவதால் அவர்களது ஆசியால் குடும்பத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, காலாகாலத்தில் நடக்க வேண்டிய கல்யாணம் குழந்தை பாக்கியம், குடும்பம், தொழில் போன்ற அனைத்து நல்லதும் நடக்கும், வம்சம்,குடும்பம் விருத்தியாகும்.
சரியான நேரத்தில் சரியான புத்தி,சரியான யோசனை, செய்ய வேண்டிய சரியான செயல் ஆகியன நமக்கு நம் முன்னோர்கள் காட்டி கொடுப்பார்கள். நம்மை வழி நடத்துவார்கள்.
பித்ரு தர்பணமும் நவகிரஹ சாந்தியும்:-
பொதுவாக நம் முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களை ( சொத்து என்றால் ஆஸ்தி மட்டுமல்ல அவர்தம் செய்த பாவ புண்ணியங்கள் கூட ) அனுபவிக்கும் உரிமை உள்ள நமக்கு அவர்களுக்கான கடன் (கடன் என்பதை விட கடமை என்பதே சரியாக இருக்கும்) தீர்ப்பது நமது கடமை அதனால் புண்ணியம் சேரும். முன்னோரின் ஆசியால் நம் வம்சம் விருத்தியாகும்.நல்ல முன்னேற்றமும் சரியான நல்ல சிந்தனைகளும் உண்டாகும். நல்லோர் துணை உண்டாகும்.இப்போது பித்ருக்களை அதாவது நம் முன்னோரை வழிபடுவதால் நவக்கிரக சாந்தி அல்லது பிரீத்தி செய்த பலனை பெறுவது எவ்வாறு எனில்…
சூரியன் என்றால் பகல் பொழுது எனவே பகல் பொழுதில் அதுவும் சூரியன் நல்ல உச்சமாக உள்ள வேளையான மதிய பொழுதில் 1:12 pm to 3:36 pm அபரான்ன வேளையில் முன்னோர்க்கு படையல் வைத்து பூஜிக்க சூரிய பிரீத்தி உண்டாகும்.
அடுத்ததாக பித்ரு தர்பணத்தில் சுத்த ஜலம் நிறைய பயன்படுத்துவதால் சந்திர பிரீத்தி உண்டாகிறது.நதி ஸ்னானம் சமுத்ர ஸ்னானம் கூட சந்திரன் சம்பந்த பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யும்.
அடுத்து பித்ரு பூஜைகளை செய்யும் போது உயர்ந்த ஆசனத்தில் உட்கார்ந்து செய்வதை விட நம் முட்டிக்கால்கள் பூமியில் படும் படி அமர்ந்து செய்ய வேண்டும்.இதனால் பூமிகாரகனான செவ்வாய் பகவானின் ஆசிக்கு ஆளாவோம்.
அடுத்து சிரார்த்த தேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணு என்பதனால் பித்ரு பூஜையில் கூட காசி கயா க்ஷேத்ர விஷ்ணு பாதத்தில் சேர வேண்டும் என்பதே அர்த்தமாகிறது.பூஜையில் நிறைய துளசி சேர்ப்பதால் புதன் பகவானின் அணுகிரகம் உண்டாகிறது.
மேலும் முறைப்படி மந்திரம் சொல்லி குரு முகமாக ( நம்ம வீட்டு வாத்தியார் ஐயர் குருக்கள் ) செய்வதனால் குருவின் அம்சமாகிய மந்திரம் வாத்தியார் அவர்க்கு தரும் தானம் ஆகியன குருவின் பேரருளை பெற்று தரும்.
பித்ரு பூஜையில் வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தி பூஜை செய்வது சுக்கிரனின் அருள் கிட்டும்.
அடுத்து அனைவருக்கும் தெரியும் கருப்பு எள்.இதனை கொண்டே பித்ரு தர்பணங்கள் செய்ய வேண்டும். சுப காரியத்திற்கு வெள்ளை எள்ளும் அபர காரியத்திற்கு கருப்பு எள்ளும் பயன்படுத்த வேண்டும். இதனால் சனி பகவானின் அருள் கிட்டும். சனைச்சர பகவானின் அதி தேவதை யம தர்ம ராஜா.பிரத்தியதி தேவதை பிரஜாபதி எனும் மனிதர்கள்.எனவே மனிதர்க்கு அன்னத்தை தானம் செய்வது பித்ரு பூஜையில் சனியின் அருளை பெற்று தரும்.காகத்திற்கு உணவு வைப்பது கூட சனி பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.
அடுத்து பசுவுக்கு அகத்தி கீரை தருவது ராகுவின் அருளுக்கு உதவும்.ஏனெனில் ராகு பகவானின் அதிதேவதை பசு.
அடுத்து கேது.இவரின் அனுக்கிரகம் பெற பித்ரு பூஜையில் தர்ப்பைப்புல் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறாக நம் முன்னோரை நாம் முறைப்படி சிரார்த்தம் பார்வணமாக அல்லது ஹிரண்யமாக அல்லது தர்பணமாக செய்வதால் நம்ம முன்னோரின் ஆசியும் நவக்கிரக ஆசியும் கிட்டும்.இவ்வாறாக நவகிரஹ தோஷங்கள் நீங்க பித்ருதோஷம், கருப்பு தோஷம் நீங்க,முன்னோர்கள் சாப விமோசனம் பெற நற்கதி உண்டாக சிரார்த்த பூஜைகள் செய்து கொள்ள வேண்டும்.
மஹாலயபக்ஷம் காலம் 15 அல்லது 16 நாட்களும் தர்பணம் சிரார்த்தம் முன்னோர்கள் வழிபாடு செய்வது நல்லது.உத்தமம். முடியாவிட்டால், மஹாளய பக்ஷ காலத்தில் ஒரு குறிப்பிட்ட சில நாட்களை தேர்ந்தெடுத்து செய்யலாம்.

மஹா பரணி:-
(11-09-2025)
பரணி நக்ஷத்திர தேவதை யமன்.எனவே எம பயம் நீங்க,எம தோஷம் நீங்க, அப மிருத்யு தோஷம் நீங்க இன்று சிரார்த்தம் செய்வது நல்லது.எதிர்பாராமல் திடீரென காலம் ஆகி விட்டால் அவர்களுக்கு ஆன்மா சாந்தி அடைய இன்றய நாளில் சிரார்த்தம் செய்து கொள்ள வேண்டும்.மேலும் இன்று சிரார்த்தம் செய்தால் பீஹார் புத்தகயா ஷேத்திரத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பாதத்தில் தர்பணம் சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும்.
மஹாளய பஞ்சமி:-
(11-09-2025)
இந்த நாளில் சிரார்த்தம் செய்தால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும். முன்னோர்கள் காலத்தில் நல்ல வசதியாக இருந்த போதும் அவர்கள் மறைவிற்கு பிறகு அந்த சொத்துக்களில் பிரச்சனை உண்டாகும்.பங்கு பங்காளிகள் பிரச்சனை உள்ள சொத்தாக இருக்கலாம்.முன்னோர் சொத்துக்கள் சேராமல் ஆகாமல் போகலாம்.அதற்கு முன்னோர்கள் சாபக்கேடு இருக்கலாம். இத்தகைய சூழலில் நாம் முன்னோர்கள் சொத்தில் இருக்கும் போது அதனை அனுபவிக்க முடியாது, அல்லது வறுமை சூழும். எதிர் காலத்தில் அந்த சொத்துக்கள் அனாதையாக போகும் நிலை வரலாம் ( அதாவது வம்ச விருத்தி இல்லாமல் இருப்பது ) இதனை தவிர்க்க வேண்டும் என்றால் இந்த மகாளய பக்ஷ காலத்தில் பஞ்சமி நாளில் முன்னோர்கள் நினைவாக சிரார்த்தம் படையல் தர்பணம் செய்ய வேண்டும்.அனாதை சொத்துக்களை அனுபவிபவர்கள் இன்று அவசியம் சிரார்த்தம் செய்தாக வேண்டும்.
மஹா வியதீபாதம்:-
(15-09-2025)
வியதீபாதம் நாம யோகம் 27 யோகங்களில் ஒன்று.வருஷத்தில் 12 அல்லது 13 முறை வரும்.அதிலும் புரட்டாசி மாத வியதீபாதம் மஹா வியாதீபாதம் என்றும் மார்கழி மாதத்தில் வரும் வியாதீபாதம் தனுர் மஹா வியாதீபாதம் என்பார்கள். இன்று பித்ருக்கள் பிரீத்தி செய்ய சிரார்த்தம் செய்வதும் வெல்லம் அல்லது சர்க்கரை தானம் செய்வதும் நல்லது. இதனால் குடும்பத்தில் உள்ள மனக்கசப்பு நீங்கும்.கசப்பான வேண்டாத ஆகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடக்காது. குடும்ப ஒற்றுமை அதிகமாகும்.
மத்யாஷ்டமி:-
(14-09-2025)
மத்யம் என்றால் நடு என்று பொருள். வாரத்தில் ஏழு நாட்கள். அதில் நடு நாள் என்பது புதன் கிழமை,ஒரு பக்ஷம் என்று சொல்லக்கூடிய 15 திதிகளில் நடு திதி அஷ்டமி. புதன்கிழமை அஷ்டமி சேர்ந்து வந்தால் புதாஷ்டமி என்று பெயர். இது சூர்ய கிரஹணத்திற்கு ஒப்பான புண்ணிய நாள்.இன்று செய்ய கூடிய பூஜைகள் ஜெபம் பாராயணம் தானம் தர்மம் ஆகியவற்றால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும்.
அது போல மஹாளய பட்ச காலத்தில் நடுவில் உள்ள திதி மத்யாஷ்டமி புண்ணிய தினமாகும்.இது மஹாளய பக்ஷ காலத்தில் சேருவது மிக சிறப்பான விஷயம் ஆகும்.நமது முன்னோர்கள் நற்கதி அடைய இந்த நாளில் சிரார்த்தம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
சில குடும்பத்தில் கருப்பு தோஷம், நமக்கே தெரியாமல் எப்போதாவது ஈம காரியங்களில் குறை ஏற்பட்டாலும், சரியாக செய்யாமல் விட்டு போயிருந்தாலும் இன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். விரோதம் காரணமாக ஈம காரியங்களில் போகாமல் சேராமல் கோடி போடாமல் இருப்பின் இந்த நாட்களில் சிரார்த்தம் செய்வதால் பலன் உண்டு.
குடும்பத்தில் நடுவில் பிறந்தவற்கு இன்று அன்னதானம் செய்யவும். சாப்பாடு கொடுத்து தேவையானதை தந்து மகிழ்ச்சி செய்தால் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து ஆசிர்வதித்து நன்மை தரும். பொதுவாகவே குடும்பங்களில் மூத்த மகன் என்று அல்லது மகள் இளைய மகன் அல்லது மகளுக்கு உள்ள உரிமை பொறுப்பு போன்றவை நடுவில் பிறந்தவர்களுக்கு கொடுப்பதில்லை. எனவே அவர்தம் மன கஷ்டம் குறைகள் நீங்க இன்று பூஜிக்க வேண்டும். நடுவில் பிறந்தவரை அழைத்து உணவளித்தல் வேண்டும்.
கணவருக்குக்காக மனைவி செய்ய அவிதவா நவமி:-
(15-09-2025)
சுமங்கலியாக இறந்தவர்களுக்கு ஒரு குடும்பத்தில் கணவர் இருக்கும் போது மனைவி காலமானால் (கணவருடன் சேர்ந்தோ காலமானால் அல்லது கணவர் இறந்து 10 நாட்களில் மனைவியும் இறந்து போனால்) கணவர் இருக்கும் காலம் வரையிலும் அவர் சுமங்கலியாகவே கருதப்படுவார். இன்று வீட்டில் காலமான சுமங்கலி நினைவாக வயதான ஸுவாசினி பெண்களுக்கு வஸ்திரம்,மஞ்சள் குங்குமம் அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் சுக்ர தோஷம் நீங்கும். தம்பதியர் ஒற்றுமை அதிகமாகும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும், திருமண தடைகள் நீக்கும். செல்வம் சேரும்.
சன்யாசிகளுக்கு ஸன்யாஸ்த மாளயம்:-
(18-09-2025) முறையாக சந்நியாசம் பெற்று கொண்டு ஸித்தி அடைந்தவர்களுக்கு மஹாளய பக்ஷ 12 வது திதியான துவாதசி அன்று சிரார்த்தம் செய்ய வேண்டும்.
நமது குடும்பத்தில் யாரேனும் துறவிகளாக, சந்நியாசிகளாக இருந்து ஜீவ சமாதி அடைந்து இருப்பின் இன்று அவர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.இதன் மூலம் குல தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.குரு கிரஹ தோஷம் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது,கரு கலையும், குழந்தைகள் சொல் பேச்சு கேட்காமல் துக்கம் தருவார்கள், சம்பாதிக்கும் பொருள் சேராது போதல்,தீராத வயிற்று நோய் போன்றவை விலக இன்று ஸித்தி அடைந்த சன்யாசிக்கு சிரார்த்தம் செய்வதும் ஜீவ சமாதியில் தீபம் ஏற்றி தியானம் செய்வதும் நல்லது.

கஜச்சாயை மாளயம்:-
(19-09-2025) மஹாளய பக்ஷ
திரயோதசி நாளுக்கு கஜச்சாயை என்று பெயர். ஒரு நாள் மட்டும் சிரார்த்தம் செய்ய இன்று கடைசி நாள்.சாயை என்றால் நிழல்,கஜம் என்றால் யானை, யானைப்பாகன் யானையின் நிழலில் எவ்வாறு நிம்மதியாக இருப்பானோ அதுபோல் இன்று பெரியவர்கள் சந்திப்பதும், மஹான்களிடம் ஆசி பெறுவதும்,தமது முன்னோர்கள் நினைவாக தர்பணம் சிரார்த்தம் செய்வது போன்றவற்றால் நாம் வசிக்க நிம்மதியாக வாழ நல்ல வீடு (நிழல்) கிடைக்கும்.சொத்துப் பிரச்னைகள் தீரும்.
விபத்தில் இறந்தவர்களுக்கு
அஸ்திரஹதமாலயம்:-
(20-09-2025)
தன் கர்ம காலம் முடியும் முன்பே ஏதேனும் ஒரு வகையில் ( விஷம் சாப்பிடுதல்,தற்கொலை,ஜலம்,தீ, மின்னல் இடி தாக்கி,தூக்கு போட்டு கொள்ளுதல்,கூரிய ஆயுதங்கள் (வேலை செய்யும் போது மெஷினில் அடிபட்டு இறந்தால்),ஆக்சிடெண்ட் (விபத்துகள்),வியாதியால், உண்ணாவிரதம் போன்றவற்றால் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். இயற்கையாக இறந்தவர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிரார்த்தம் செய்வோர் இன்று செய்யக்கூடாது.
அனைவருக்கும் மஹாளய அமாவாசை:-
(21-10-2025) நாளில் கன்னி மாதத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்துள்ள அமாவாசை நாளில் முன்னோர்கள் நினைவாக தர்பணம்,தானம், புண்ணிய நதி ஸ்னானம், அன்னதானம் செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். தனக்காக சிரார்த்தம் செய்ய யாருமே இல்லாமல் இறந்தவர்கள், நம் நண்பர்கள், உற்றார் உறவினர்,உலகில் இருந்த ஜீவர்கள் ஆகிய அனைவரும் நற்கதி அடைய சிரார்த்தம், தர்பணம் செய்து தன் வீட்டில் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது முழுமையான பலன் கிடைக்கும்.
ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி அஸ்ட்ரோ