ஸ்ரீ பக்த ஜெயம்கொண்ட ஆஞ்சநேயர் ஆலயத்தில் மஹாளய அமாவாசை பூஜை அமர்க்களம்!!
ஆவணிப்பட்டியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஆதியந்தப்பிரபு ஆலயத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஆஞ்சநேயர் ஆலயங்களில் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதுண்டு. இந்த நாளில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு,வடை மாலை சாற்றப்பட்டு வழிபடப்படுகிறது. குறிப்பாக கிரக தோஷங்களை நீக்கும் நாள் என்றும், முன்னோர்களை வழிபடும் நாள் என்றும் நம்பப்படுவதால் அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பானது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆவணிப்பட்டி கிராமத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர்,ஸ்ரீ ஆதியந்த பிரபு ஆலயத்தில், பகவான் ஆஞ்சநேயருக்கு பால்,தயிர்,நெய்,
பன்னீர்,இளநீர், சந்தனம்,விபூதி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அபிஷேகத்திற்குப் பிறகு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரமும், வடை மாலை சாற்றியும் மிகச் சிறப்பான முறையில் வழிபாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானமாக பிரசாதம் வழங்கப்பட்டது.
பிறகு ஊரார்கள், நாட்டார்கள், நகரத்தார்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு கோவில் பிரசாதம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவணிப்பட்டி நகரத்தார் பர்மா கருப்பையா செட்டியார் அவர்கள் வந்திருந்து ஆஞ்சநேயரின் அருட்பிரசாதத்தை பெற்றுக்கொண்டு சிரஞ்சீவி ஆஞ்சநேய பகவானை தரிசனம் செய்து கொண்டார்கள்.
கிரக தோஷ நிவர்த்தி:
குறிப்பாக அமாவாசை என்பது கிரக தோஷங்கள் நீங்கும் நாள் என்றும்,வாயு பகவானுக்குரிய நாள் என்றும் நம்பப்படுகிறது. ஆஞ்சநேயர் வாயு புத்திரன் என்பதால், அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது வாயு பகவானை வழிபடுவதாக கருதப்படுகிறது.
முன்னோர் வழிபாடு:
மஹாளய அமாவாசை என்பது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் உகந்த நாள் என்பதால், இந்த நாட்களில் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரபலமான ஆலயங்களில் ஒன்றான
ஆவணிப்பட்டி ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர் ஆலயம் வேண்டுதலை வேண்டியபடியே கொடுக்கும் சிறப்புமிக்க ஆலயமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசை அன்றும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அதுபோல் புரட்டாசி மாதம் 5ஆம் நாள் (21/09/2025) ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அமாவாசை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அற்புத சுவை மிக்க புளியோதரை,
சர்க்கரைப் பொங்கல் மற்றும் பகவான் ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட வடையும் பிரசாதமாக வழங்கப்பட்டது.வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அன்னதானம் உண்டு, ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள் கண்டு, பக்தி பரவசத்தில் பேரானந்தம் கொண்டு மகிழ்ந்தனர்.

இந்த ஆலயத்தின் ஸ்தாபகர், நவ சண்டி உபாசகர், ஜோதிட வித்தகர், ஸ்ரீ ஆஞ்சநேயா ஆன்மீக பீடத்தின் தலைவர் ஸ்ரீ பிரும்ம ஸ்ரீ பத்மநாபன் என்ற சுப்பு ஐயர் கூறியதாவது.
ஆவணிப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர் ஆலயம் என்பது வடகிழக்கு திசை நோக்கி அதாவது குபேர திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஆலயம் குபேர திசை நோக்கி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்திருப்பது இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பதற்காகவே குபேர திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
அது போலவே இங்கு வரும் பக்தர்கள் அவர்கள் என்ன வேண்டுதல்கள் செய்தார்களோ அந்த வேண்டுதல்கள் மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

ஆகவே இங்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அமாவாசை பூஜைக்கு பக்தர்கள் அதிகமாக வந்து அவர்களுடைய வேண்டுதல்களை கோரிக்கையாக வைத்து வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு அதற்கு உண்டான காணிக்கைகளை ஸ்ரீ ஆஞ்சநேய பகவானுக்கு செலுத்தி செல்வ செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது, என்று ஆனந்தத்தோடு பக்தியோடும் கூறியுள்ளார்.