ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் கன்னி தெய்வங்களின் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். 9 வயதிற்கு கீழ் உள்ள, பூப்படையாத பெண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து, அவரை அம்பாளாக பாவித்து, பாதங்களை கழுவி பாத பூஜை செய்ய வேண்டும்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆடி மாதம் வரக்கூடிய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்.
வீடுகளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்து அருளை பெறலாம். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.
அம்மன் ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது, வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிற்றுக்கிழமையன்று வீடுகளில் கூழ் காய்ச்சி வீதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கும், வீதியில் செல்பவருக்கும் கூழ்வார்த்து அம்மன் அருளை பெறலாம்.
ஆடி ஞாயிற்றுக்கிழமையன்று கூழ் ஊற்றி அம்மனை வணங்குவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
கன்னி தெய்வ வழிபாடு :
ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபடக் கூடிய நாள். ஆடி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவார்கள்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண், இயற்கையான முறையில் மரணம் அடையாமல், அந்த பெண்ணினுடைய ஆயுள் முடிவதற்கு முன்பாகவே இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்த பெண்ணை தான், அந்த குடும்பத்தினுடைய கன்னி தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள்.
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால் அந்த குடும்பத்திற்கு கன்னி தெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியம். உங்களுடைய
வீட்டிலும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி யாராவது இறந்திருந்தால் அந்த தெய்வத்தை மனதார நினைத்து இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, சர்க்கரை பொங்கலை நிவேதனமாக வைத்து, கன்னிப் பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொட்டு, வளையல் உள்ளிட்ட பொருட்களை பூஜை அறையில் வைத்து, வாசனை மிகுந்த பூக்களை கொண்டு அம்மனின் திருவுருவ படத்திற்கு அலங்காரம் செய்து, உங்கள் குடும்பத்தின் கன்னி தெய்வத்தை மனதார நினைத்து தீப தூப ஆராதனைகள் செய்து, இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிறு பெண் குழந்தைக்கு பொட்டு, வளையல் உள்ளிட்ட பொருட்களை தானமாக கொடுங்கள்.உங்கள் வீட்டு கன்னி தெய்வத்தை வழிபட்டால்,உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும்.குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.தீராத கஷ்டங்கள் தீரும்.
உங்கள் குலம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்பது திண்ணமாகும்.