ஐப்பசி அன்னாபிஷேகமும் – வீட்டில் உணவு பஞ்சமில்லாமல் இருக்கும் ரகசியமும் !!?

by ஆசிரியர்
Reading Mode

ஐப்பசி அன்னாபிஷேகமும் – வீட்டில் உணவு பஞ்சம் வராமல் இருக்கும் ரகசியமும் !!? 25-10-2026
ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கிறது.

ஐப்பசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம்தான். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் இது.

இந்த மாதம் முழுவதுமே புனிதமானது என்கின்றன ஞானநூல்கள். துலா மாதத்தில் காவிரியில் நீராடுவதன் மூலம் பாரத தேசத்தில் பாயும் சகல நதிகளிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்கிறது காவிரி மாஹாத்மியம் என்னும் நூல்.
இந்த மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று அன்னாபிஷேகம்.

“ஐப்பசி மாதத்தின் முக்கியமான விசேஷங்களில் ஒன்று அன்னாபிஷேகம். பொதுவாக ஐப்பசி பௌர்ணமியன்றோ, அந்தந்த ஆலய மரபுக்கு ஏற்பவோ, அஸ்வினி நட்சத்திர நாளிலோ சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, 2026-இல், ஐப்பசி பௌர்ணமி அக்டோபர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அந்த நாளில் சிவலிங்கத் திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, மரபுக்கு ஏற்ப அந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சில ஆலயங்களில் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட அன்னம் நீர்நிலைகளில் சேர்க்கப்படுவதும் உண்டு.

அன்னாபிஷேகம்
இதற்குப் பின்னால் ஒரு விரிவான ஆன்மிகக் கருத்து இருக்கிறது. இறைவனின் அருள் மனிதர்களுக்கு மட்டுமல்ல; பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உரியது. நீரில் வாழும் உயிரினங்களும் நன்மை பெற வேண்டும் என்ற பரந்த கருணை உணர்வையும் இந்த வழிபாடு எடுத்துரைக்கிறது.

இறைவனை வழிபடுவது என்பது தனிமனிதனின் நன்மைக்காக மட்டுமே அல்ல. எல்லா உயிர்களும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் அதில் அடங்கியிருக்கிறது.

நம் மரபில் அன்னத்துக்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உணவு. உணவின்றி உயிர்கள் வாழ முடியாது. அதனால்தான் அன்னத்தை இறைவனின் அருளாகப் பார்க்கிறோம்.

அன்னத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அன்னை அன்னபூர்ணியை வழிபடும் மரபு நம்மிடம் இருக்கிறது.

“அன்னபூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராணவல்லபே.ஞான வைராக்ய ஸித்தியர்த்தம்,
பிக்ஷாம் தேஹி ச பார்வதி”

என்று அன்னபூர்ணியைப் போற்றும் ஸ்லோகம் அமைந்துள்ளது.

இந்த ஸ்லோகத்தின் மூலம், அன்னை பார்வதியிடம் உணவை மட்டுமல்லாமல் ஞானத்தையும் வைராக்கியத்தையும் வேண்டுகிறோம். உணவு உடலுக்கு வலிமையை அளிக்கிறது. அந்த உடலைக் கொண்டு நல்ல செயல்களைச் செய்வதற்கும், ஞானத்தைப் பெறுவதற்கும், மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கும் உணவு ஆதாரமாகிறது.

உணவருந்துவதற்கு முன்பு இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்வது, உணவின் மீது மரியாதையை வளர்க்கிறது. வீட்டில் இயன்றவர்கள் தரையில் அமர்ந்து உணவருந்துவதும் நம் பாரம்பர்யத்தில் இடம்பெற்ற ஒரு பழக்கம்.

வயது அல்லது உடல்நிலை காரணமாக அவ்வாறு அமர முடியாதவர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் உணவருந்தலாம். முக்கியமானது, உணவின் மதிப்பை உணர்ந்து அதை அலட்சியப்படுத்தாமல் இருப்பதுதான்.

“அன்னம் ந நிந்த்யாத்” என்று தைத்திரீய உபநிஷத் அன்னத்தை இகழக் கூடாது என வலியுறுத்துகிறது. அன்னத்தைப் போற்ற வேண்டும்; அதைப் பெருக்க வேண்டும்; உணவுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதே இந்தப் போதனையின் சாரம்.

நம் முன்னோர்கள் உணவை ஒருபோதும் வீணாக்க மாட்டார்கள். சாப்பாட்டில் மீதமாகும் ஒரு பருக்கையைக்கூட அலட்சியமாகத் தூக்கி எறியாமல் பாதுகாத்து வந்தார்கள். பழைய சாதத்தைக்கூட முறையாகப் பாதுகாத்து, மறுநாள் உணவாகப் பயன்படுத்திய பழக்கம் இருந்தது.

குறிப்பு:-

ஆனால் இன்று பல இடங்களில் தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்வதும், மீதமாவதை வீணாக்குவதும் வழக்கமாகி விட்டது. அதே நேரத்தில், போதிய உணவு கிடைக்காமல் எத்தனையோ பேர் சிரமப்படுகிறார்கள்.

எனவே, நமக்குத் தேவையான அளவு உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உணவை வீணாக்காமல் இருப்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல; சமூகப் பொறுப்பும் கூட.

குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே உணவின் மதிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அரிசியும் எத்தனையோ பேரின் உழைப்பின் மூலமாக நம்மிடம் வந்து சேர்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அன்னத்தை மதிப்பது என்பது விவசாயியை மதிப்பது, இயற்கையை மதிப்பது, உழைப்பை மதிப்பது, இறைவனின் அருளுக்கு நன்றி செலுத்துவது எனப் பல பொருள்களைக் கொண்டது.

ஐப்பசி அன்னாபிஷேகம்!
சிவபெருமானை எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளாகக் கருதுகிறோம். அந்தப் பரம்பொருளுக்கு அன்னத்தை அர்ப்பணிப்பது, அனைத்து உயிர்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையையும் உள்ளடக்கியது.

அன்னதானம் செய்வதும் இதே உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடுதான். நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது, உணவின் உண்மையான மதிப்பை உணர்கிறோம். தனக்காக மட்டும் சேர்த்து வைப்பதைவிட, பிறருக்கும் கொடுத்து மகிழ்வதில் நிறைவு இருக்கிறது.

அன்னாபிஷேக நாளில் இறைவனுக்கு அன்னம் சமர்ப்பித்து வழிபடும் காட்சியைத் தரிசனம் செய்தாலே வீட்டில் உணவுப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை. எனவே அனைவரும் தவறாமல் இந்த நாளில் சிவாலயம் சென்று அன்னாபிஷேகக் காட்சியைத் தரிசனம் செய்யுங்கள். இயலாதவர்கள் வீட்டில் பூஜை அறை அல்லது சுவாமி படத்துக்கு முன்பு அன்னத்தை வைத்து சமர்ப்பித்து வழிபடுங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கொம்பியல்கோதை உடனமர் வைகல்நாதர். விசாலாட்சி தாயார் உடனமர் காசி விஸ்வநாதர். பிரசன்னநாயகி உடனமர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மூன்று சிவ ஆலயத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாக வைகல்நாதர்ஆலயமும், வலது கண்ணாக காசி விஸ்வநாதர் ஆலயமும், இடது கண்ணாக பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்தப் புனித ஸ்தலங்கள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. பிரம்மன் பூஜித்து பாவ விமோசனம் பெற்ற ஸ்தலமாகும்.

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற இந்த ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் மூன்று சிவபெருமானுக்கும் அன்னாபிஷேகம் அதி விமரிசையாக நடைபெற இருக்கிறது பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பாவங்களைப் போக்கி சிவபெருமானின் அருளை பெற்று நீடூடி வாழ அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அண்ணா அபிஷேகம் நடைபெறும் நேரம்:-

மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

ஆலயத்திற்கு செல்ல வேண்டிய வழித்தடம்:-

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் எஸ். புதூரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும்,

ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, வைகைநாதர் ஆலயம்.

தொடர்பு எண்:-

ஐயர் கார்த்தி.
94439 96256.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00