தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 32,554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 49,845 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்து, மூன்று நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 32,288.70 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 48,649 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சில முக்கியமான திட்டங்கள் பற்றிய விவரங்கள்:
RGE நிறுவனம் – சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கை இழை (Man Made Fibre) உற்பத்தியில், உலகளவில் முன்னணி நிறுவனமான RGE நிறுவனம், இந்தியாவிலேயே, முதன் முறையாக, தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்திட முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், 4,953 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1,065 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
Kaynes Circuits India Private Limited நிறுவனம் – தமிழ்நாட்டில் 4,995 கோடி ரூபாய் முதலீட்டில், 74 Layer PCB, HDI PCB, Flexible PCB உற்பத்தி, உயர்செயல்திறன் laminates, Camera Module அசெம்பிளி, wire harness assembly போன்ற மேம்பட்ட மின்னணுவியல் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை அமைக்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் 4,700 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், தூத்துக்குடி ஒரு எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக (Electronics Cluster) வளர்ச்சி பெறும்.
Yeemak Pvt Ltd & Jeanuvs நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில், multilayer PCB, artillery shells, radar systems மற்றும் நுகர்வோர் மின்னணு உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளன. இத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட முதலீடு 3,400 கோடி ரூபாய் மற்றும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு 7,600 நபர்கள் ஆகும்.
சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் இந்திய இரயில்வேக்கு இரயில் பெட்டி உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம், தூத்துக்குடியில், கப்பல் கட்டுமானத்திற்கான உதிரிபாகங்கள் தயாரிக்க 1500 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீட்டில், ஒரு உற்பத்தி ஆலையை நிறுவன முன்வந்துள்ளது.
சக்தி குழுமம் – வெடிபொருள், உந்துசக்தி உற்பத்தி மற்றும் பரிசோதனை ஆலையை சக்தி குழுமம் தூத்துக்குடியில் அமைக்க முன்வந்துள்ளது. 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாலை நிறுவப்படுவதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி மேலும் வலுப்படும்.
Ethereal Exploration Guild – விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், தூத்துக்குடியில் நடுத்தர வகை ராக்கெட் இன்ஜின்கள் உற்பத்தி மற்றும் சோதனை செய்வதற்கான புதிய ஆலையை அமைக்கவுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் தூத்துக்குடி ஒரு முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hwaseung Enterprise – தென் கொரியாவைச் சேர்ந்த தோல் அல்லாத காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான Hwaseung நிறுவனம், 1720 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ஒரு உற்பத்தி நிறுவனம் அமைக்க முன்வந்துள்ளது.Mobius Energy நிறுவனம் 1000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீட்டில், தேனி மாவட்டத்தில் சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் உற்பத்தி ஆலை நிறுவிட முன்வந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 265.15 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1196 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விவரங்கள்:
வ.எண் நிறுவனத்தின் பெயர் இடம் உற்பத்தித் துறை
1 Seaora Marine Pvt Ltd தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
2 Shrimathi Salt Pvt Ltd தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
3 Ganesh Rajah Organization Pvt Ltd தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
4 Kadalaiyur Match Company தூத்துக்குடி பொது உற்பத்தி
5 Surya Match Industries தூத்துக்குடி பொது உற்பத்தி
6 Antara Residency தூத்துக்குடி விருந்தோம்பல்
7 Everest Glass and Plywood Factory இராமநாதபுரம் பொது உற்பத்தி
8 La Palmera Resort இராமநாதபுரம் விருந்தோம்பல்
9 VVM PUF Industries திருநெல்வேலி பொது உற்பத்தி
10 Deborah Technologies LLP திருநெல்வேலி இரசாயனம்
11 Muhil Modern Rice Mill திருநெல்வேலி உணவு பதப்படுத்துதல்
12 Sattur Venkateshwara Paper Mills Pvt Ltd திண்டுக்கல் பொது உற்பத்தி
13 Shree Vinayaga Agro Manufacturing & Processing Industry திண்டுக்கல் உணவு பதப்படுத்துதல்
14 Horizon Beverages திண்டுக்கல் உணவு பதப்படுத்துதல்
15 Inbasekar Fly Ash Bricks மதுரை பொது உற்பத்தி
16 Rajarajeswari Krafts Private Limited விருதுநகர் பொது உற்பத்தி
17 MTC Polymers and Packaging விருதுநகர் பொது உற்பத்தி
18 Aathi Fishnet கன்னியாகுமரி பொது உற்பத்தி
19 Moringa Market Linkage Initiative பல மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல்
தமிழ்நாடு முதலமைச்சர் 1,230 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 திட்டங்களின் வணிக உற்பத்தியினை தொடங்கி வைத்தார்.
பணி நியமன ஆணைகள் வழங்கல்
TATA Power Solar, Infinx மற்றும் Pinnacle Infotech ஆகிய மூன்று தொழில் நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணண், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. மார்க்கண்டேயன், எஸ். அமிர்தராஜ், சி. சண்முகய்யா, மருத்துவர் நா. எழிலன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தலைமைச் செயலாளர் திரு நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, தொழில் வணிக ஆணையர் இல. நிர்மல்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு.அலர்மேல்மங்கை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் கே.அழகுசுந்தரம், RGE நிறுவனத்தின் தலைவர் டெய் வெய் லின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.